search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
    X

    தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

    டெல்லியில் 5 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக விவசாயிகள் மிகக் கடுமையான வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, காவிரிப்படுகை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான். இதன் காரணமாக, 200-க்கும் அதிகமான விவசாயிகள் கடந்த 2 மாதங்களில் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி மரணத்திலும் பலியாகியுள்ளனர்.

    தங்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த 5 நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பது உள்பட தங்களின் அடிப்படைக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களின் போராட்டம் வெயிலிலும், குளிரிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.



    போராட்டக்களத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார். போராடும் விவசாயிகள் மீது அக்கறை செலுத்த தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும் இந்தப் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

    காவிரி நீர் கிடைக்காமல், டெல்டா மாவட்ட விளைநிலங்கள் வறண்டு கிடக்கின்றன. பருவமழை தவறியதால் தமிழகத்தின் பல பகுதிகளும் பாலைவனங்களைப் போல காட்சியளிக்கின்றன. விவசாயிகளின் கடன் சுமை அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழுத்திக் கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் தலைவர் கருணாநிதி பதவியேற்பு மேடையிலேயே கையெழுத்திட்டு 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையைத் தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றினார்.

    இன்றைய அ.தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. மேலும், தேசிய வங்கிகள் மூலம் பெற்றுள்ள கடன்களையும் ரத்து செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை விவசாயப் பெருங்குடி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அண்டை மாநிலங்களில் இத்தகைய கடன்களை அரசே ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    ஆனால், தமிழகத்தில் அதற்கான சிந்தனை கூட ஏற்படவில்லை. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்துவதற்கான திட்டங்களோ, நிதி ஒதுக்கீடுகளோ போதுமான அளவில் இல்லை. பயிர்காப்பீட்டுக்கானப் பங்குத் தொகையைக் கூட அ.தி.மு.க. அரசு உரிய அளவில் செலுத்தவில்லை.



    மாநில அரசு தமிழக விவசாயிகளை ஒட்டுமொத்தமாக வஞ்சித்து வரும் நிலையில், மத்திய அரசும் தமிழகத்தின் உரிமைகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் அதனை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. தமிழக விவசாய நிலங்களைப் பாதிக்கும் எரிவாயுத் திட்டங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவற்றைக் கைவிடும் அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை.

    இரு அரசுகளாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தமிழகத்தில் போராடினால், செயலிழந்த அரசின் காதுகளில் விழாது என்பதால் டெல்லிக்கு தங்கள் சொந்த செலவில் சென்று போதிய உணவு உள்ளிட்ட வசதிகள் எதுவுமின்றி, குடிநீர் கூட கிடைக்காத நிலையில், தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆண், பெண் என்ற பேதமின்றி பலரும் பங்கேற்று நடத்தும் போராட்டமும் அதில் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும் இதயமுள்ள எவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்.

    5 நாட்களாகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை நோக்கி மத்திய அரசின் பார்வை திரும்ப வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு விரைந்து நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×