search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்டெய்னரில் அதிபயங்கர ஆயுதங்களுடன் தமிழகத்துக்குள் கப்பல் ஊடுருவல்?
    X

    கண்டெய்னரில் அதிபயங்கர ஆயுதங்களுடன் தமிழகத்துக்குள் கப்பல் ஊடுருவல்?

    அதி பயங்கர ஆயுதங்கள் நிரப்பப்பட்ட கண்டெய்னர்கள் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டு இருப்பதாக மத்திய உளவு பிரிவினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

    சென்னை:

    மும்பையில் கடல் வழியாக புகுந்து 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் நாடு முழுவதும் கடலோர பகுதிகளில் காவல் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு இந்தியா முழுவதும் 6 மாதத்திற்கு ஒரு முறை “ஆபரே‌ஷன் ஆம்லா” என்ற பெயரில் கடலோர காவல் படையினரும், மாநில போலீசாரும் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகிறார்கள். தீவிரவாதிகள் போல ஊடுருவும் கடலோர காவல் படையினரை உள்ளூர் போலீசார் மடக்கி பிடிக்க வேண்டும். இதுவே பாதுகாப்பு ஒத்திகையின் சிறப்பு அம்சமாகும்.

    இந்த ஒத்திகையின் போது கோட்டை விடும் போலீசார் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

    மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் தமிழகம் முழுவதும் கடலோர காவல் படையினர் உஷார் படுத்தப்பட்டு ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    மீனவர்களை ஒருங்கிணைந்து மாநில கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்கள்.

    இந்த நிலையில் வெளி நாடுகளில் இருந்து அதி பயங்கர ஆயுதங்கள் நிரப்பப்பட்ட கண்டெய்னர்கள் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டு இருப்பதாக மத்திய உளவு பிரிவினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆனால் இந்தியாவுக்குள் எந்த பகுதியில் இந்த கப்பல் ஊடுருவி இருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் உறுதியாக தெரியவில்லை.

    தமிழக கடலோர பகுதிகளில் கூட இந்த ஆயுத கப்பல் ஊடுருவி இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த கப்பலில் அதிபயங்கர ஆயுதங்களான நவீன துப்பாக்கிகள், வெடி குண்டுகள் உள்ளிட்டவை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சுங்க துறையினரும், போலீசாரும் உஷாராக செயல்பட வேண்டும் என்றும் உளவு பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக வரும் கண்டெய்னர்களை சுங்கத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். கண்டெய்னர்களை கையாள்வதற்காக துறைமுகத்தையொட்டி உள்ள பகுதிகளில் பிரமாண்டமான குடோன்களும் செயல்பட்டு வருகின்றன.

    அந்த குடோன்களில் இருந்து கண்டெய்னர்களை வெளியே கொண்டு செல்வதற்கு சுங்கத்துறையினர் தடை விதித்துள்ளனர். இது போன்று குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கண்டெய்னர்களை பலத்த சோதனைக்கு பின்னர் வெளியில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக அனைத்து கண்டெய்னர்களும் ஸ்கேன் செய்யப்பட்டு வருவதாக சுங்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கண்டெய்னரில் ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டு இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிகாரிகள் மட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×