search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் வறட்சி நீடிப்பு: தென்னை  மரங்கள் கருகியதால் தேங்காய் விலை கடும் உயர்வு
    X

    குமரி மாவட்டத்தில் வறட்சி நீடிப்பு: தென்னை மரங்கள் கருகியதால் தேங்காய் விலை கடும் உயர்வு

    குமரி மாவட்டத்தில் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் கருகியதால் தேங்காய் விலை கடும் உயர்வு அடைந்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நெற்பயிருக்கு அடுத்த படியாக தென்னை விவசாயமே அதிக அளவு நடக்கிறது. தற்போது மாவட்டத்தில் மழையின்றி வறட்சி நிலவுகிறது. நெற்பயிர்கள் கருகிவிட்டன. தோட்டபயிர்களும் நீரின்றி வாடி விட்டது. அணைகளில் தண்ணீர் இல்லாததால் வாடிய பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

    இது போல தென்னை மரங்களும் கடும் வெயில் காரணமாக கருகி வருகிறது. பெரும்பாலான தென்னை மரங்களில் போதுமான காய்கள் காய்ப்பதில்லை. அவற்றின் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது.

    இதனால் மாவட்டம் முழுவதிலும் இருந்து தேங்காய் உற்பத்தி வெகுவாக குறைந்து போனது. மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் தேங்காயின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது.

    இதன் காரணமாக குமரி மாவட்ட மார்க்கெட்டில் தேங்காயின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் பிருந்ததை விட இப்போது கணிசமாக உயர்ந்து உள்ளது.

    நாகர்கோவில் வடசேரி மற்றும் அப்டா மார்க்கெட்டுகளில் இன்று காலை ஒரு கிலோ தேங்காய் விலை ரூ.28 முதல் ரூ.29 வரை விற்கப்பட்டது. அந்த தேங்காய்களும் அதிக பூ விழும் அளவுக்கு அடர்த்தியாக இல்லை என்று வியாபாரிகள் குறைபட்டு கொண்டனர்.

    தற்போது குமரி மாவட்ட மார்க்கெட்டுகளில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படும். இங்கேயே தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் வெளியூருக்கு ஏற்றுமதி செய்யும் தேங்காயின் அளவும் கணிசமாக குறைந்து உள்ளது.

    இது பற்றி தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய வேண்டும். கருகிய தென்னை மரங்கள் மீண்டும் செழிப்புடன் வளர வேண்டும். அதன் உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும். அதன்பின்புதான் குமரியில் தேங்காய் விலை குறையும் வாய்ப்பு ஏற்படும்.

    குமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.14 முதல் ரூ.16 வரை விற்கப்பட்டது. அதன்பின்பு சிறிது சிறிதாக உயர்ந்து கிலோ ரூ. 32 வரை சென்றது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து ரூ.24 வரை வந்தது. இப்போது மீண்டும் உயர்ந்து உள்ளது. மழை பெய்யும் பட்சத்தில் இந்த விலை மீண்டும் குறையும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×