search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 15-ந் தேதி நடக்கிறது
    X

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 15-ந் தேதி நடக்கிறது

    தமிழக பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 15-ந் தேதி சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
    சென்னை:

    தமிழக பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 15-ந் தேதி சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

    தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், 2017-2018-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 16-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெற இருக்கிறது.

    எனவே, ஆளும் கட்சியான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 15-ந் தேதி மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு, கட்சியின் அவைத்தலைவரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 122 பேர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 2 ஆக உடைந்துவிட்டதால், சட்டசபையில் அசாதாரண நிலை நிலவி வருகிறது. வலுவான எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க.வும் பல்வேறு பிரச்சினைகளை அவையில் கிளப்பி வருவதால், அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும் என்று தெரிகிறது.

    கூட்டத்தில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×