search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    தோகைமலை அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கருப்பு கொடிகள் கட்டி கடைகள் அடைக்கப்பட்டன.
    தோகைமலை:

    கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சியில் அனந்தபுரம்உடையாப்பட்டி, கழுகூர், மாகாலிப்பட்டி, முனையம்பட்டி, கம்பேஸ்வரம், அக்காண்டிமேடு, கே.துறையூர், மருதூர், பூசாரியூர், ஈச்சங்காட்டுப்பட்டி, மாறிபாறைபட்டி, செ.வளையப்பட்டி, போஜாநாயக்கன்பட்டி, கண்ணிமார்பாளையம், வேம்பத்ராம்பட்டி, மூட்டக்காம்பட்டி, பிள்ளைகோடங்கிப்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.

    இந்த நிலையில் அனந்தபுரம்உடையாப்பட்டியில் தை பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். இங்கு கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தடை விதிக்கப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு சட்டசபையில் அவசர சட்டம் நிறைவேற்றியது. இதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி அனந்தபுரம் உடையாப்பட்டியில் வருகிற 12-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ், குளித்தலை கோட்டாட்சியர் சக்திவேல், தாசில்தார் சக்திவேல், தோகைமலை போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தும், இதுவரை அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் உடையாப்பட்டியில் உள்ள கிழக்கு மாரியம்மன் கோவில் தென்புறம் வாடிவாசல் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது.

    ஆனால் நேற்று வரை அனுமதி வழங்கவில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் வேதனை அடைந்தனர். இந்நிலையில் அனந்தபுரம்உடையாப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி நேற்று முக்கிய வீதிகளில் கருப்பு கொடிகள் கட்டி கடைகள் அடைக்கப்பட்டன. பின்னர் அனந்தபுரம் உடையாப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் அமர்ந்து, அனந்தபுரம்உடையாப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்பதால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குளித்தலை- மணப்பாறை சாலையில் உள்ள அனந்தபுரம் உடையாப்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாலையில் கருப்பு கொடிகளையும், மரத்தையும் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை கோட்டாட்சியர் சக்திவேல், தாசில்தார் சக்திவேல், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெய்குமார் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், ஜல்லிக்கட்டுக்காக பொதுமக்கள் தேர்வு செய்த இடத்தை ஆய்வு செய்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்படும். அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் குளித்தலை- மணப்பாறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×