search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூர் அருகே குடிபோதையில் தந்தையை கொன்ற மகன்
    X

    ஓசூர் அருகே குடிபோதையில் தந்தையை கொன்ற மகன்

    ஓசூர் அருகே குடிபோதையில் தந்தையை கொன்ற மகனை போலீசார் கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒன்னல்வாடியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 52). கூலித்தொழிலாளி.

    இவருக்கு அமலா, வாணி என்ற 2 மகள்களும், கார்த்திக், விஜய் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒன்னல்வாடியில் கோவில் திருவிழா நடந்தது. அப்போது வெங்கடேஷ் மற்றும் அவரது மகன் கார்த்திக் (27) ஆகியோர் குடிபோதையில் இருந்ததாக கூறுப்படுகிறது.

    அந்த நேரம் வெங்கடேஷ் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் வெங்கடேசை ஆம்புலன்சில் வைத்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு இரவு கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வெங்கடேஷ் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து ஆம்புலன்சில் வெங்கடேசின் உடலை ஏற்றி புறப்பட்டார்கள். இந்த நிலையில் ஒன்னல்வாடி கிராமத்தில் திருவிழா நடந்த காரணத்தால் உடலை அங்கு கொண்டு செல்லாமல் அவர்கள் ஆம்புலன்சில் ஊரை சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் டவுன் போலீசார் நேற்று மதியம் ஆம்புலன்சில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வெங்கடேசின் மகன் கார்த்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குடிபோதையில் அவருக்கும் வெங்கடேசுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அவரை கார்த்திக் ஆத்திரத்தில் பயங்கரமாக தாக்கி உள்ளார்.

    இதில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு மயங்கி கிடந்தார். மேலும், ஆத்திரம் தணியாத கார்த்திக் துண்டால் தனது தந்தையின் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது.

    பின்னர் அவர் இறந்து போனதும் போதையில் வெங்கடேஷ் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்ததால் மயங்கி கிடக்கிறார் என நாடகமாடி உள்ளார். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றவுடன் தலையில் அடிப்பட்டதால் இறந்து போனதாக உறவினர்களுக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வெங்கடேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனையில் வெங்கடேஷ் கொலை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டதால் சம்பவத்தன்று உடன் இருந்த கார்த்திக் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து விசாரித்ததில் அவர் குடிபோதையில் வெங்கடேசை கொலை செய்தது தெரியவந்தது.

    பின்னர் கார்த்திக் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    தந்தையை குடிபோதை ஏற்பட்ட தகராறால் கழுத்தை இறுக்கி கொன்ற சம்பவம் ஓசூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×