search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் பத்துக்கண்ணு கிராமத்தில் மத்திய குழுவினர் ஆய்வு
    X
    வில்லியனூர் பத்துக்கண்ணு கிராமத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

    வறட்சியால் பாதிப்பு: புதுவை - காரைக்காலில் மத்திய குழுவினர் ஆய்வு

    மத்திய வேளாண் துறை இணை செயலாளர் ராணி குமுதினி தலைமையிலான குழுவினர் இன்று காலை புதுவை வில்லியனூர், பத்துக்கண்ணு கிராமத்தில் விவசாய நிலங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
    புதுச்சேரி:

    பருவ மழை பெய்யாததால் புதுவை மாநிலத்தின் புதுவை மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

    புதுவை மற்றும் காரைக்கால் பிராந்தியங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அரசு அறிவித்துள்ளது. வறட்சி நிவாரணமாக ரூ.100 கோடி வழங்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மேலும், புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய வேளாண் மந்திரியை டெல்லியில் சந்தித்து வறட்சி நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தினார். இதனை ஏற்று வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய அரசு ஒரு குழுவை புதுவைக்கு அனுப்பி வைத்துள்ளது.

    மத்திய வேளாண்துறை இணை செயலாளர் ராணி குமுதினி தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று புதுவை வந்தனர். இந்த குழுவினர் புதுவை தலைமை செயலகத்தில் புதுவை அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தின் போது புதுவை அரசு செயலாளர்கள் வறட்சி பாதிப்பு, சாகுபடி செய்யப்பட்ட பயிர் சேதம் உள்ளிட்டவற்றை மத்திய குழுவினரிடம் விளக்கி கூறினர். மேலும், படக் காட்சிகள் மூலமும் வறட்சி பாதிப்புகள் மத்திய குழுவினருக்கு காட்டப்பட்டது.

    இதனையடுத்து மத்திய குழுவினர் இந்திரா நகர் அரசு விடுதியில் இரவு தங்கினர். இன்று (திங்கட்கிழமை) காலை மத்திய குழுவினர் இரு அணிகளாக பிரிந்து புதுவை மற்றும் காரைக்காலில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.

    இதன்படி மத்திய வேளாண் துறை இணை செயலாளர் ராணி குமுதினி தலைமையிலான குழுவினர் இன்று காலை 8.30 மணியளவில் இந்திரா நகர் விடுதியில் இருந்து காரில் புறப்பட்டனர். புதுவை வில்லியனூர், பத்துக்கண்ணு கிராமத்தில் விவசாய நிலங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.



    அப்போது விவசாயிகள் மழை இல்லாததால் கருகிய நெற்பயிற்களை மத்திய குழுவினரிடம் எடுத்து காட்டினர். மேலும், தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை விவசாயிகள் மத்திய குழுவினரிடம் விளக்கி கூறினர்.

    பின்னர், அங்கிருந்து காட்டேரிக்குப்பம், சோரப்பட்டு, பி.எஸ்.பாளையம், கரியமாணிக்கம், மடுகரை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கிருந்த விவசாயிகளிடமும் கருத்து கேட்டனர்.

    பிற்பகல் 2.30 மணி வரை ஆய்வு நடந்திவிட்டு, பின்னர் மத்திய குழுவினர் மீண்டும் புதுவை திரும்பினர். மதிய உணவுக்குப்பின் புதுவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளிடம் மத்திய குழுவினர் கலந்துரையாடுகின்றனர்.

    தொடர்ந்து இன்று மாலை அவர்கள் கார் மூலம் சென்னை சென்று அங்கிருந்து டெல்லி திரும்புகின்றனர்.

    இதை போல் மத்திய அரசு அதிகாரி பொன்னுசாமி தலைமையிலான மற்றொரு குழுவினர் காரைக்கால் மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தனர். காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மத்திய குழுவினர் கோட்டுச்சேரி, திருவெட்டக்குடி, புதுக்குடி, பேட்டை, டி.ஆர்.பட்டினம், வாஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதன் பிறகு பிற்பகலில் மத்திய குழுவினர் காரைக்கால் திரும்பினர். மதிய உணவுக்குப்பின் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளிடம் கலந்துரையாடுகின்றனர். இதன் பிறகு மத்திய குழுவினர் இன்று மாலை கார் மூலம் சென்னை செல்கின்றனர்.

    அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர். பின்னர் மத்திய அரசிடம் வறட்சி பாதிப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்கின்றனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் புதுவைக்கு வறட்சி நிவாரணத்தை மத்திய அரசு அறிவிக்கும்.

    Next Story
    ×