search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்வு
    X

    புதுவையில் குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்வு

    புதுவை மாநிலத்தின் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் கடந்த 1990-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது குடிநீர் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 27 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    புதுவை மாநிலத்தின் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் கடந்த 1990-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது குடிநீர் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கான குடிநீர் கட்டணம் கடந்த 2010-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது உயர்த்தப்பட்டுள்ளது.

    உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணம் விவரம் வருமாறு:-



    வீட்டு உபயோக பிரிவில் (தனி நபர்கள்) மீட்டர் மூலம் அளவீடு செய்யப்படும் குடிநீர் வினியோகத்துக்கு ஒரு யூனிட் 50 பைசாவில் இருந்து ரூ.3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (காலாண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.270 ஆக இருக்கும்-90 யூனிட்டுகள் வரை) 90 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 50 பைசாவில இருந்து ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    மீட்டர் மூலம் அளவீடு செய்யப்படாத அரசு குடியிருப்புகளில் குறைந்த வருவாய் பிரிவு எல்.ஐ.ஜி. 1, 2, 3 (லாஸ்பேட்டை, பூமியான் பேட்டை, ஒதியஞ்சாலை) குடியிருப்புகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.11-ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    நடுத்தர வர்க்கத்தினர் குடியிருப்பு வகை 4-க்கு (லாஸ்பேட்டை) மாதம் ரூ.15-ல் இருந்து ரூ.75 ஆகவும், உயர் வருவாய் பிரிவு குடியிருப்புகள் வகை 5-க்கு மாதம் ரூ. 20-ல் இருந்து ரூ. 100 ஆகவும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

    குடிநீர் இணைப்பு துண்டிப்பு கட்டணம்:- குடிநீர் இணைப்பு துண்டிப்பு கட்டணம் ரூ. 150-ல் இருந்து ரூ. 3 ஆயிரமாகவும், மறு இணைப்பு கட்டணம் ரூ. 100-ல் இருந்து ரூ. 2 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய இணைப்பு பெற விண்ணப்ப கட்டணம் ரூ.250-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேபோல் குடிநீர் மீட்டர்களுக்கான வாடகை கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ. 50 ஆகவும், மீட்டர் திருடப்பட்டால் அதற்கான கட்டணமாக ரூ.120-ல் இருந்து ரூ. 300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

    மீண்டும் வழங்கப்படாத ஒரு முறை செலுத்த கூடிய வைப்பு தொகை வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு ரூ. 250-ல் இருந்து ரூ. 5 ஆயிரமாகவும், வர்த்தக பயன்பாட்டுக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
    Next Story
    ×