search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘அம்மா கல்வியகம்’ பெயரில் புதிய இணைய தளம்: ஓ.பி.எஸ். தொடங்கி வைத்தார்
    X

    ‘அம்மா கல்வியகம்’ பெயரில் புதிய இணைய தளம்: ஓ.பி.எஸ். தொடங்கி வைத்தார்

    கிராமப்புற மாணவர்கள் நலனுக்காக ‘அம்மா கல்வியகம்’ என்ற பெயரில் கட்டணமில்லா புதிய இணையதளத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் ‘அம்மா கல்வியகம்’ என்ற பெயரில் கட்டணமில்லா புதிய இணையதளத்தை இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ‘கட்டணமில்லா இணையதள சேவை மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா எண்ணத்தில் உதித்த இத்திட்டம் முழு வடிவம் பெறும் வகையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மறைந்தாலும் மறையாத புகழோடு ஜெயலலிதா இருப்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.



    மாணவர்கள் நலனுக்காக அரசு நிதியில் இருந்து 4-ல் ஒரு பங்கு கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் ஏழை-எளிய மாணவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் பயனடைவார்கள்.

    வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாடு இத்திட்டம் மூலம் செயல்படுத்தப்படும். உலகளாவிய பேராசிரியர்கள் மூலம் ஐ.ஐ.டி. நுழைவு தேர்வு பயிற்சி அளிக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த ஐ.ஐ.டி. தொழில்நுட்ப கல்லூரியில் நுழைவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

    மேலும் பிளஸ்-2 தேர்வுக்கான பயிற்சி, தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை அளிக்கப்படும். வரும் காலங்களில் கிராமப்புற மாணவர்களுக்கு தடையாக இருக்கும் ‘நீட்’ தகுதி தேர்வு பயிற்சியும் வழங்கப்படும்.

    இத்திட்டம் மேலும் உயர உலகதரம் வாய்ந்த ‘அம்மா கல்வியகம்’ என்ற பெயரை பெறும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி. முனுசாமி, மா.பா.பாண்டியராஜன். முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், எம்.பி.க்கள் பி.ஆர்.சுந்தரம், லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள் சாமிநாதன், டேவிட் ஞானசேகரன், அற்புதராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×