search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்தர் ஆசிரமம் தாக்கப்பட்ட வழக்கில் 10 பேர் விடுதலை
    X

    அரவிந்தர் ஆசிரமம் தாக்கப்பட்ட வழக்கில் 10 பேர் விடுதலை

    அரவிந்தர் ஆசிரமம் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் நிருபிக்கப்படாததால் 10 பேரை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சகோதரிகள் ஜெயஸ்ரீ, அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ, நிவேதிதா, ஹேமலதா ஆகிய 5 பேர் தங்கி ஆசிரமத்துக்கு சேவை செய்து வந்தனர். அவரது பெற்றோர் பிரசாத்- சாந்திதேவி ஆகியோரும் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 2014-ம் ஆண்டு ஆசிரம நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக சகோதரிகள் 5 பேரும் புகார் அளித்தனர். புகார் அளித்ததால் ஆசிரம நிர்வாகம் ஆத்திரம் அடைந்து சகோதரிகள் 5 பேரையும் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது. ஆனால் சகோதரிகள் 5 பேரும் ஆசிரமத்தை விட்டு வெளியேற மறுத்து வந்தனர்.

    இந்த நிலையில் 2014-ம் ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி சகோதரிகள் 5 பேரும் கட்டாயத்தின் பேரில் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தங்களது பெற்றோருடன் காலாப்பட்டில் உள்ள கடலில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சகோதரிகள் ஜெயஸ்ரீ, ராஜஸ்ரீ மற்றும் இவர்களது தாய் சாந்திதேவி ஆகியோர் உயிர் இழந்தனர்.

    இதையடுத்து புதுவையில் ஆசிரமத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்தது. இதன் தொடர்ச்சியாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அரவிந்தர் ஆசிரமத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது அரவிந்தர் ஆசிரமம் தாக்கப்பட்டது. இதன்பேரில் ஆசிரம நிர்வாகிகள் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீர. மோகன், துணைதலைவர் இளங்கோவன், இளைஞர்அணி தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் 10 பேர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை நடத்திய நீதிபதி பத்மநாபன் நேற்று மாலை தீர்ப்பளித்தார். புகார் கூறிய 10 பேர் மீதும் குற்றம் நிருபிக்கப்படாததால் 10 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.
    Next Story
    ×