search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி வாய்ப்பு
    X

    500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி வாய்ப்பு

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி வாய்ப்பு அளித்து இருக்கிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31-ந்தேதி ஆகும்.
    சென்னை:

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி வாய்ப்பு அளித்து இருக்கிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31-ந்தேதி ஆகும்.

    இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

    கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதியில் இருந்து டிசம்பர் 30-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்த என்.ஆர்.ஐ.கள் மற்றும் அப்போது வெளிநாட்டுக்கு சென்றிருந்த இந்தியர்களுக்கு (இந்தியாவில் வசிப்பவர்கள்) செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை இந்திய ரிசர்வ் வங்கி அளித்து உள்ளது.

    சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் இவர்கள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். இதற்கான கடைசி நாள் மார்ச் 31-ந்தேதி ஆகும். செல்லாத நோட்டுகளை மாற்றும்போது, சில ஆவணங்களை ரிசர்வ் வங்கியிடம் அவர்கள் வழங்கவேண்டும்.



    வெளிநாட்டில் இருந்த, இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள், கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதிவரை வெளிநாட்டில் இருந்ததற்கான அத்தாட்சியாக பாஸ்போர்ட் நகல்; இந்திய குடியுரிமை கட்டுப்பாட்டு அதிகாரி இடும் முத்திரை அடங்கிய பாஸ்போர்ட் பக்கங்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட்டின் கடைசி பக்கங்கள்;

    அடையாளச் சான்று ஆவணம் அல்லது ஆதார் அட்டை; வருமான வரிக்கணக்கு எண் அட்டையின் நகல்; அனைத்து வங்கிக் கணக்குகளின் 8.11.16 முதல் 30.12.16 வரையிலான அறிக்கை நகல் ஆகியவற்றை காட்டவேண்டும்.

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.), கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதிவரை வெளிநாட்டில் இருந்ததற்கான அத்தாட்சியாக பாஸ்போர்ட் நகல்; இந்திய குடியுரிமை கட்டுப்பாட்டு அதிகாரி இடும் முத்திரை அடங்கிய பாஸ்போர்ட் பக்கங்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட்டின் கடைசி பக்கங்கள்;

    இந்தியாவுக்குள் சிவப்பு சானல் வழியாக வரும்போது ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளைக் கொண்டு வருவதற்காக சுங்க வரித்துறையினர் அளிக்கும் நோட்டு மதிப்பு சான்றிதழ்; வருமான வரிக்கணக்கு எண் அட்டையின் நகல்; அனைத்து வங்கிக்கணக்குகளின் 8.11.16 முதல் 30.12.16 வரையிலான அறிக்கை நகல் ஆகியவற்றை காட்டவேண்டும்.

    வெளிநாட்டு குடிமக்களாக இருக்கும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், வெளிநாட்டினர் மற்றும் நேபாளம், பூடான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு ரிசர்வ் வங்கி இந்த வசதியை அளிக்கவில்லை.

    மேலும் அனைத்து விவரங்களையும் www.rbi.org.in என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

    இதுபற்றி ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வெளிநாட்டு குடிமக்களாக வசிக்கும் இந்தியர் யாராவது இந்தியாவுக்கு வரும்போது, தங்கள் கையில் உள்ள செல்லாத நோட்டுகளை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும்.

    அதிகபட்சமாக ரூ.25 ஆயிரத்துக்கான செல்லத்தக்க நோட்டுகளை சுங்கத்துறையினர் திருப்பித் தருவார்கள். உதாரணமாக ஒரு லட்சம் ரூபாய்க்கான செல்லாத நோட்டுகளைக் கொடுத்தாலும், ரூ.25 ஆயிரம்தான் திருப்பித்தரப்படும். வரும் ஜூன் மாதத்துக்குள் இந்தியாவுக்கு வந்தால் மட்டுமே இந்த சலுகையை அவர்கள் பெறமுடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×