search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்றத்தூர் அருகே சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் தண்ணீர் தேங்கி இருக்கும் காட்சி
    X
    குன்றத்தூர் அருகே சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் தண்ணீர் தேங்கி இருக்கும் காட்சி

    சென்னைக்கு குடிநீர் வழங்க 31 கல்குவாரிகளின் தண்ணீர் தரம் குறித்து ஆய்வு

    சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக மாங்காடு, பம்மல், திருநீர்மலை, நன்மங்கலம் போன்ற புறநகர் பகுதிகளில் உள்ள 31 கல்குவாரிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
    சென்னை:

    சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக மாங்காடு, பம்மல், திருநீர்மலை, நன்மங்கலம் போன்ற புறநகர் பகுதிகளில் உள்ள 31 கல்குவாரிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளன.



    கடந்த ஆண்டு (27.2.2016 நிலவரப்படி) 4 ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 8,108 மில்லியன் கனஅடியாக இருந்தது. தற்போது (நேற்றைய நிலவரப்படி) 1,731 மில்லியன் கனஅடி மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6,377 மில்லியன் கனஅடி குறைவாக உள்ளது. எனவே சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க குடிநீர் வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் இருந்து 100 கிணறுகள் மூலம் நாள் ஒன்றுக்கு 70 முதல் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. நெம்மேலி, மீஞ்சூர் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தினமும் தலா 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.

    வருகிற நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் தண்ணீரின் தேவையும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு நெய்வேலி நிலக்கரி சுரங்கம், கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    முதற்கட்டமாக சென்னையை அடுத்த மாங்காட்டில் உள்ள 22 கல்குவாரிகளிலும், பம்மல், திருநீர்மலை, நன்மங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 3 கல்குவாரிகளிலும் என மொத்தம் 31 கல்குவாரிகளில் தண்ணீர் எடுத்து அதனை பயன்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெறுகின்றன.

    கல்குவாரிகளில் எடுக்கப்படும் தண்ணீர் மக்கள் குடிப்பதற்கு உகந்ததா? என்பது குறித்து கிண்டி ‘கிங்ஸ்’ ஆராய்ச்சி நிறுவனம், அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல், புவி அமைப்பியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். கல்குவாரிகளின் நீர்மட்டம் குறித்து டாக்டர் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    சென்னை நகரம் குடிநீர் தட்டுப்பாடு அபாயத்தில் சிக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்து குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×