search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பி.எஸ். அணி எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு
    X

    ஓ.பி.எஸ். அணி எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு

    ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி" ஜனாதிபதியை நாளை சந்திக்க உள்ளனர்.
    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். உடல்நல கோளாறு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 70 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    அவரது மறைவுக்கு பின்னர் முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென ராஜினாமா செய்தார். இதன் பின்னர் சசிகலா தரப்பினர் தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக பரபரப்பான புகாரை கூறிய பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் உத்தரவிட்டார். முதல்-அமைச்சர் பதவியில் இருந்த போது ஓ.பி.எஸ். பிறப்பித்த இந்த உத்தரவால் பரபரப்பு நிலவியது.

    அதன் பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தால் முதல்-அமைச்சர் பதவியில் நீடிக்க முடியவில்லை. புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் மரணத்தில் நீடிக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எனவே அதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று தண்டையார்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் விலகும் என்றும் அறிவுறுத்தினார்.



    இந்நிலையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக டெல்லி சென்று ஜனாதிபதியிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக மைத்ரேயன் எம்.பி. இன்று காலை 6.40 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். மீதமுள்ள ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி.க்கள் 11 பேர் இன்று இரவு அல்லது நாளை காலை டெல்லி செல்கிறார்கள். அங்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். அப்போது ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்துகிறார்கள். இதன் காரணமாக ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பான விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
    Next Story
    ×