search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்திரபதிவுக்கு விதித்த தடையை நீக்க முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    பத்திரபதிவுக்கு விதித்த தடையை நீக்க முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு

    விவசாய நிலங்கள் சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதாக கூறி பத்திரபதிவுக்கு விதித்த தடையை நீக்க முடியாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் எல்லாம் சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாற்றப்படுகிறது என்றும் இதனால், விவசாய நிலங்களும், விவசாயமும் அழிந்து வருவதாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானைராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர், ‘அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து’ உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு ஒரு அரசாணையை தாக்கல் செய்தது.

    அதில், ‘அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை, மறு விற்பனை செய்யலாம். ஆனால், இனி வரும் காலங்களில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக சட்டவிரோதமாக மாற்றுவதற்கும், அந்த சட்ட விரோத நிலங்களை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.

    அரசின் இந்த முடிவினை ஐகோர்ட்டு ஏற்கவில்லை. தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கர், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் உள்ளன. இந்த வீட்டு மனைகளை எவ்வாறு ஒழுங்குப்படுத்தி வரையறை செய்ய போகிறீர்கள்? இதற்கான அரசின் திட்டம் என்ன? எதிர்காலத்தில் சட்டவிரோத வீட்டு மனைகள் உருவாக்கப்படாமல் தடுப்பது எப்படி? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட ஒருங்கிணைந்த திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி, அதை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    ஆனால், இந்த ஒருங்கிணைந்த திட்டத்தை தமிழக அரசு இதுவரை உருவாக்கவில்லை. இந்த திட்டத்தை உருவாக்க கால அவகாசம் வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


    இதற்கிடையில், ஐகோர்ட்டு தலைமை நீதிபதியான சஞ்சய்கி‌ஷன் கவுல், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மாற்றலாகி சென்று விட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அய்யாத்துரை, மனுதாரர் யானை ராஜேந்திரன் உட்பட பலர் ஆஜராகினார்கள்.

    அப்போது, ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அறிக்கையாக தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.

    அப்போது, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், ‘கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து தமிழகத்தில் 3-வது முதல்-அமைச்சர் வந்து விட்டார். ஆனால், இதுவரை ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வீடுகளையும், நிலத்தையும் விற்பனை செய்ய முடியாமல், பலர் தவித்து வருகின்றனர். அதேநேரம், இந்த ஐகோர்ட்டு தடையை அகற்றவும் இல்லை. தமிழக அரசு திட்டத்தை உருவாக்கவும் இல்லை’ என்று கூறினார்.

    அதற்கு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், இந்த பிரச்சினைக்கு இன்றே முடிவு கட்டலாம். அரசு நிலை குறித்து விளக்கம் கேட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்கலாம்’ என்று கருத்து கூறினார்.

    மேலும், நாடு முழுவதும் நகரமயமாக்கல் என்பது கடுமையான வளர்ச்சியை அடைந்து வருகிறது. அதே நேரம், வீட்டு மனைகள், அந்த மனைகளின் உள்ள சாலைகள் எல்லாம் விதி முறைப்படி உருவாக்க வேண்டும். சாலைகள் எல்லாம் குறுகியதாகவும், விதி முறைகளை மீறியும் இருந்தால் என்ன செய்வது?’ என்று நீதிபதி கருத்து கூறினார்.

    அப்போது நடந்த வாதத்தின் போது, நீதிபதி மகாதேவன், ‘தமிழக அரசு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அந்த திட்டத்தை ஐகோர்ட்டு பரிசீலித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்கப்படும். அதுவரை, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது’ என்று கருத்து தெரிவித்தார்.

    இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல், ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘தமிழக அரசு 4 வாரத்துக்குள் ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 28-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அதுவரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவையும் நீட்டிக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.
    Next Story
    ×