search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் ரூ. 2 1/2 லட்சத்துக்கு ஆண் குழந்தையை விற்க முயற்சி: 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
    X

    மதுரையில் ரூ. 2 1/2 லட்சத்துக்கு ஆண் குழந்தையை விற்க முயற்சி: 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

    6 மாத ஆண் குழந்தையை ரூ. 2 லட்சத்துக்கு விற்க முயன்றதாக 2 பெண்கள் உள்பட 5 பேரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.

    அவனியாபுரம்:

    மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கனகா (வயது 40). இவர்களுக்கு சாமுவேல் என்ற 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

    கனகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரை பிரிந்து விட்டார். அவர்கள் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையையும் கனகா - பழனிகுமார் தம்பதியினர் வளர்த்து வந்தனர்.

    நாளடைவில் பழனிக் குமாரும், கனகாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் கனகா 2 குழந்தைகளுடன் கூலி வேலை பார்த்து வந்தார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரெபேக்காள் (52) குழந்தையை விற்றால் பணம் வாங்கித்தருகிறேன் என்று கனகாவிடம் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய கனகா ரூ. 2 1/2 லட்சத்துக்கு பேரம் பேசி, தனது 6 மாத ஆண் குழந்தையை ரெபேக்காளிடம் கொடுத்தார். அதனை பெற்ற அவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிக்கு விற்றுள்ளார்.

    குழந்தையை பெற்ற மணி, மதுரை அவனியாபுரத்துக்கு வந்து அங்கு ராம்குமார் (37) என்பவரிடம் சிறிது நாட்கள் குழந்தையை வைத்திருக்குமாறு கூறி கொடுத்துவிட்டு சென்று விட்டார். பின்னர் 3 நாட்கள் கழித்து குழந்தையை மணி வாங்கிச் சென்று விட்டார்.

    இந்த நிலையில் பேரம் பேசியபடி கனகாவிடம் ரூ. 2 1/2 லட்சத்தை கொடுக்காமல் மிக குறைவான தொகையை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கனகா மனம் மாறி குழந்தையை பெற அவனியாபுரத்துக்கு சென்று ராம்குமாரிடம் கேட்டார். அப்போது குழந்தையை மணி வாங்கிச் சென்றுவிட்டது தெரிய வந்தது.

    மேலும் ரூ. 2 1/2 லட்சத்தை ரெபேக்காள் மற்றும் அவனியாபுரத்தைச் சேர்ந்த இந்திராணி, வண்ணக்கிளி, வைரமுத்தம்மாள், சுரேஷ், ஜானகிராமன் ஆகியோர் பங்கு போட்டுக்கொண்டதும் தெரியவந்தது.

    இது குறித்து கனகா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நல்லு, சப்-இன்ஸ்பெக்டர் சத்ய பாமா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் புதுக்கோட்டை மணியிடம் இருந்து குழந்தையை கைப்பற்றி கனகாவிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக மணி, சுரேஷ், ராம்குமார், ரெபேக்காள், இந்திராணி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 21 ஆயிரத்து 700 மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தலைமறைவான வண்ணக்கிளி, ஜானகி ராமன், வைரமுத்தம்மாள் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×