search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    500 கடைகள் மூடப்பட்டதால் 1700 டாஸ்மாக் ஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றம்
    X

    500 கடைகள் மூடப்பட்டதால் 1700 டாஸ்மாக் ஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றம்

    முதல்-அமைச்சரின் உத்தரவின்படி 500 மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன. அங்கு பணிபுரிந்த 1700 ஊழியர்கள் அதிக விற்பனையாகும் கடைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 500 டாஸ்மாக் கடைகளை முதல்வராக இருந்த ஜெயலலிதா மூடினார்.

    தற்போது முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி மேலும் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு முதல் கையெழுத்திட்டார்.

    இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 23-ந் தேதி முதல் சென்னை உள்பட அனைத்து நகர, கிராமப்புறங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டன.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 120 மதுக்கடைகள் மூடப்பட்டன.


    மூடப்பட்ட 500 கடைகளில் 1700 ஊழியர்கள் பணி யாற்றினார்கள். அவர்கள் அருகில் உள்ள அதிக மது விற்பனையாகும் கடைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    சூப்பர்வைசர், விற்பனையாளர் போன்ற பொறுப்புகளில் பணியாற்றிய இவர்கள் அந்தந்த மாவட்டத்திற்குள்ளேயே பணியில் அமர்த்தப்பட்டனர்.

    டாஸ்மாக் கடைகளை மூடுவதால் அதில் பணியாற்றும் ஊழியர்களை அரசின் வேறு காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என்று டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. ஆனால் டாஸ்மாக் கடைகளில் உள்ள காலி இடங்கள் மற்றும் அதிக விற்பனையாகும் கடைகளில் நிர்வாகம் நிரப்பி உள்ளது.

    இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கிர்லோஷ்குமார் கூறியதாவது:-

    முதல்-அமைச்சரின் உத்தரவின்படி 500 மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன. அங்கு பணிபுரிந்த 1700 ஊழியர்கள் அதிக விற்பனையாகும் கடைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    500 மதுக்கடைகள் மூடப்பட்டதால் வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால் எந்தெந்த கடைகளில் எவ்வளவு வருவாய் இழப்பு என்பதை கணக்கிட்டு கூற முடியாது.

    இருப்பினும் இந்த 500 கடைகள் மூலம் வருடத்துக்கு ரூ.2400 கோடி மது விற்பனையாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×