search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானூர் அருகே 10 பஸ்களை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    வானூர் அருகே 10 பஸ்களை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

    வானூர் அருகே ஊருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாகவே அரசு, தனியார் பஸ்கள் சென்றதால் 10 பஸ்களை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கிளியனூர், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு, தனியார் பஸ்கள் ஊருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாகவே சென்று விடுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் புகார் கூறினர். மேலும் பஸ்கள் சிறைபிடிப்பு போராட்டம் நடைபெறும் எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 17-ந் தேதி வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் பிரபாகரன் தலைமையில் கிளியனூரை சேர்ந்த பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள், திண்டிவனம் அரசு பஸ் பணிமனை மேலாளர் சிவக்குமார், கடலூர் கோட்ட அரசு பஸ் நேர கண்காணிப்பாளர் கமலக்கண்ணன், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் பார்வேந்தன் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    அப்போது கிளியனூர், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிகளில் அரசு, தனியார் பஸ்கள் ஊருக்குள் கண்டிப்பாக வரும். வராத பஸ், டிரைவர்-கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி நேரத்தில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அரசு, தனியார் பஸ்கள் கிளியனூர், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாகவே சென்றன. இதனால் ஆத்திரமடைந்த கிளியனூர் பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கிளியனூரில் ஒன்று திரண்டனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வராத பஸ் இன்று மீண்டும் ஊருக்குள் வந்தது. அப்போது அடுத்தடுத்து ஊருக்குள் வந்த 6 அரசு, 4 தனியார் பஸ்களை கிளியனூர் பஸ்நிலையத்தில் வைத்து பொதுமக்கள் சிறைபிடித்தனர். டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். திண்டிவனம்-புதுவை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கிளியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக வராத பஸ் இன்று திடீரென்று ஊருக்குள் வந்தது. எங்களுக்கு நிரந்தரமாக பஸ்கள் ஊருக்குள் வந்து செல்லவேண்டும் என்று கூறினர். இதைக்கேட்ட போலீசார் ஊருக்குள் வராத பஸ்சை 10 நாட்கள் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி விடுகிறோம். டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி கூறினர்.

    இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திண்டிவனம்- புதுவை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்சில் வந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×