search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு இளைஞர்கள் புதிய கட்சி தொடக்கம்: தேர்தலில் போட்டியிட முடிவு
    X

    ஜல்லிக்கட்டு இளைஞர்கள் புதிய கட்சி தொடக்கம்: தேர்தலில் போட்டியிட முடிவு

    ஜல்லிக்கட்டு இளைஞர்களின் புதிய அரசியல் கட்சிக்கு “என் தேசம் என் உரிமை கட்சி” என்று பெயரிட்டுள்ளனர். இதை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க திரண்ட இளைஞர்களின் போராட்டம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. இளைஞர்கள் நினைத்தால் சாதிப்பார்கள் என்று நிரூபித்துக் காட்டினார்கள்.

    இந்த இளைஞர்களின் எழுச்சி அரசியலிலும் வருமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் புதிதாக அரசியல் கட்சி தொடங்குவது பற்றி சமூக வலைதளங்களில் விவாதித்தனர்.

    அதன்படி சென்னையில் இன்று கட்சியை தொடங்க முடிவு செய்தனர். அரும்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கட்சி தொடக்க விழா நடந்தது.

    இதற்காக சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் திரண்டு வந்தனர்.

    ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரத் துறையில் இருப்பவர்கள், பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களும் கலந்து கொண்டனர்.

    புதிய அரசியல் கட்சிக்கு “என் தேசம் என் உரிமை கட்சி” என்று பெயரிட்டுள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எபினே சர், சத்யா, பிரவீணா, சுகன்யா, கார்த்தி, சுதந்திர தேவி, பிரகாஷ், பிரசாத் ஆகியோர் கட்சியின் பெயரை அறிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து கட்சி கொடியையும் அறிமுகம் செய்தனர். தேசிய கொடியின் வண்ணமும், கொடியின் நடுவில் இளைஞர் ஒருவர் அடிமை சங்கிலியை உடைத்தது போன்ற படமும் இடம்பெற்றுள்ளது.

    புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை இன்று காலையில் தொடங்கியதும் பலர் ஆர்வத்துடன் வந்து சேர்ந்தனர். உறுப்பினராக சேருவதற்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    நிர்வாகிகளாக வர விரும்புபவர்கள் அதற்காக ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். நிர்வாகிகளாக விரும்புபவர்களுக்கு தனி தேர்வு வைத்திருந்தனர்.

    அதற்காக ஒரு பெரிய அரங்கில் 4 குழுவினர் அமர்ந்திருந்தனர். அந்த குழுவினர் நிர்வாகியாக விரும்பியவர்களிடம் கேள்வி கேட்டனர்.

    உங்கள் பகுதியில் நீங்கள் எந்த அளவுக்கு பிரபலம் ஆனவர்? ஊழல் அற்ற தமிழ்நாட்டை உருவாக்க செய்ய வேண்டிய பணிகள் என்ன? நமது கட்சியை நிலைப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் நீங்கள் சொல்லும் 5 வழிகள் என்ன?

    விவசாயிகள் நலனுக்காக நாம் என்ன செய்ய வேண்டும்? பெண்களின் பாதுகாப்பை உயர்த்துவதிலும், அதிகாரப் பதிவிலும் உங்களது யோசனைகள் என்ன? இளைஞர்களின் வேலை வாய்ப்பை எவ்வாறு அதிகரிப்பது? இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றால் நீங்கள் எந்த சட்டத்தை மாற்றியமைப்பீர்கள்? மேற்கண்ட 7 கேள்விகளுக்கும் அவர்கள் சொல்லும் பதிலை கம்ப்யூட்டர்களில் பதிவு செய்து கொண்டனர்.


    பின்னர் 4-வது குழுவிடம் அந்த நபர் செல்ல வேண்டும். அந்த குழுவினர் கேள்வி கேட்க மாட்டார்கள். அதற்கு அவர்கள் பதில் சொல்வார்கள். அந்த தகவல்களையும் கம்ப்யூட்டர்களில் பதிவு செய்தனர்.

    மொத்தமாக அனைவரது பெயரையும் பின்னர் ஒருங்கிணைத்து அவர்களுடைய திறமைகளின் அடிப்படையில் நிர்வாகிகள் பொறுப்பு வழங்கப்படுகிறது.

    புதிய கட்சியை அறிவித்து கொடியையும் அறிமுகப்படுத்தி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எபினேசர் கூறியதாவது:-

    இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. குறிப்பாக மெரினா போராட்டத்துக்கு பிறகு அந்த உணர்வு அதிகரித்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தவர்கள் எந்த பிரச்சனையையும் முடிவுக்கு கொண்டு வரவில்லை.

    சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும், வார்தா புயல் வீசிய போதும் யாரும் அழைக்காமல் இளைஞர்கள் இறங்கி வேலை செய்தார்கள். தங்களாலும் மக்கள் சேவை செய்ய முடியும் என்று நிரூபித்தார்கள்.

    3 ஆண்டுகளாக அரசியல் கட்சிகளால் தீர்த்து வைக்க முடியாத ஜல்லிக்கட்டு பிரச்சனை இளைஞர்கள் ஒன்று திரண்டு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக உடனடியாக முடிவுக்கு வந்தது.

    சமூக வலைதளங்கள் மூலமாகவே ஒன்று திரண்டோம். மெரினா போராட்டத்தின் போது எல்.இ.டி. திரை அமைத்து மக்கள் மேடையை உருவாக்கினோம். அப்போது பல பிரச்சனைகள் வெளி உலகுக்கு தெரிய வந்தது.

    அது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல. வெளிநாட்டு குளிர்பானங்கள் எந்த அளவுக்கு நமது உடலைக் கெடுக்கிறது. ஜெர்சி இன பசும் பால் மூலம் வேகமாக பரவி வரும் புற்று நோய் போன்றதெல்லாம் வெளியே தெரிந்தது.

    இதையெல்லாம் இளைஞர்கள் எளிதாக சமூக வலைதளங்கள் மூலம் புரிந்து கொள்கிறார்கள். மக்களுக்கும் தெரிவிக்கிறார்கள். இப்படி பல புதுப்புது வி‌ஷயங்கள் சமூகத்தில் இழையோடி இருப்பது தெரிய வந்தது. இவற்றுக்கெல்லாம் தீர்வு கண்டு சமூகத்தை காக்கும் கடமை இளைஞர்களுக்கு இருப்பதை உணர்ந்தோம்.

    எனவேதான் அன்று மாட்டுக்காக போராடிய இளைஞர்கள் இன்று நாட்டுக்காக போராட கட்சியை தொடங்கி இருக்கிறோம்.

    எங்களுக்குள் தலைவர் யார்? முதல்-அமைச்சர் யார்? பிரதமர் யார் என்ற உணர்வுகள் கிடையாது. உருப்படியாக நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும். அது மட்டும்தான் குறிக்கோள்.

    அப்துல்கலாம் நிறைய கண்டுபிடித்தார். எல்லாவற்றையும் விட முக்கியமாக இளைஞர்களை கண்டு பிடித்தார். அவர்களால்தான் இந்த தேசத்தை உயர்த்த முடியும் என்று நம்பினார். அவரது நம்பிக்கையின் அடிப்படையில் எங்களது சேவையை தொடருகிறோம்.

    எங்கள் கட்சியின் கொள்கைகள் லஞ்சம், ஊழல் அற்ற தமிழகத்தை உருவாக்குவது. சாதி, மதசார்பற்ற நாட்டை உருவாக்குவது, மதுவை அறவே ஒழிப்பது, உலகத்தரத்துடன் அரசு ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சை வழங்குவது, கட்சியிலும், ஆட்சியிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது.

    60 வயது முடிந்தவர்களுக்கு தேர்தலில் நிற்க அனுமதி கிடையாது. அவர்கள் ஆலோசகர்களாக செயல்படலாம். சாதி, மத அடிப்படையில் பதவி வழங்க மாட்டோம். குற்றப்பின்னணி கொண்டவர்கள் கட்சியில் அடிப்படை உறுப்பினராகவும் இருக்க முடியாது.

    பணபலம் அல்லது புகழை மையமாக வைத்து தனிப்பட்ட யாருக்கும் பதவி வழங்க மாட்டோம். நேர்மையும், திறமையும் உள்ள அனைவருக்கும் வாய்ப்பு உண்டு. எங்களைப் பொறுத்தவரை தலைவர் என்பவர் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார் என்பதுதான். எங்கள் கட்சி தமிழர்களின் மனசாட்சியாக செயல்படும்.

    இளைஞர்கள், பொது மக்களின் எண்ணங்களில் மாற்றம் வர வேண்டும். அந்த நிர்வாகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

    எனவே தேர்தலில் எங்கள் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். உள்ளாட்சி தேர்தலிலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் கண்டிப்பாக போட்டியிடுவோம். அப்போது இளைஞர் சக்தியையும், மாணவர் சக்தியையும் வெளியே கொண்டு வருவோம்.

    போராட்டக்களத்தில் மட்டும்தான் நாடு எங்களை திரும்பி பார்த்தது. வரும் காலத்தில் அரசியல் களத்திலும் திரும்பிப் பார்க்க வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×