search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் கடைகளில் பருப்பு, உளுந்து, பாமாயில் நிறுத்தம்
    X

    ரேஷன் கடைகளில் பருப்பு, உளுந்து, பாமாயில் நிறுத்தம்

    சென்னையில் உள்ள ரே‌ஷன் கடைகளில் இம்மாதத்தில் இருந்து(பிப்ரவரி)பருப்பு வகைகள், பாமாயில் வினியோகம் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    ரே‌ஷன் கடைகளில் ஏழை நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வந்தது.

    சில வருடங்களுக்கு முன்பு வெளி மார்க்கெட்டில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்ததால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் சிரமப்பட்டனர்.

    எனவேதான் தமிழக அரசு ரே‌ஷன் கடைகளில் குறைந்த விலைக்கு பருப்பு வகைகள், பாமாயில் வழங்கி வந்தது.

    1 கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும், 1 கிலோ உளுத்தம் பருப்பு ரூ.30-க்கும் பாமாயில் 1 கிலோ ரூ.25-க்கும் ரே‌ஷனில் வழங்கப்பட்டது.

    வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ரூ.200 வரை விற்கப்பட்டதால் ரே‌ஷன் கடைகளில் பருப்பு வகைகள் மற்றும் பாமாயில் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினார்கள்.

    இதனால் ரே‌ஷன் கடைகளில் முதல் வாரத்திலேயே பருப்பு விநியோகம் முடிந்து விடும். அந்த அளவுக்கு ரே‌ஷன் கடைகளில் கூட்டம் அலை மோதியது.



    ரே‌ஷனில் விநியோகம் செய்வதற்காக அரசு வெளிமார்க்கெட்டில் பருப்பு வகைகளை கொள்முதல் செய்து வந்தது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டு தோறும் ரூ.300 கோடிக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டது.

    இந்த நிலையில் சமீப காலமாக ரே‌ஷன் கடைகளில் பருப்பு விநியோகம் படிப்படியாக குறைக்கப்பட்டது. முதலில் வருபவர்களுக்கு மட்டுமே பருப்பு வகைகள், பாமாயில் கிடைத்தது. 2-வது வாரத்தில் சென்றால் பருப்பு இல்லை என்று ரே‌ஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் பருப்பு வழங்கப்பட்டது.

    தற்போது இந்த மாதம் சென்னையில் உள்ள ரே‌ஷன் கடைகளில் பருப்பு வகைகள், பாமாயில் வினியோகம் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. எந்த ரே‌ஷன் கடையிலும் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு விநியோகிக்கப்படவில்லை. பாமாயில் சப்ளையும் நிறுத்தப்பட்டு விட்டது.

    இதுபற்றி ரே‌ஷன் கடைக்காரர்களிடம் கேட்டபோது, “எங்களுக்கு சப்ளை இல்லை” என்று தெரிவித்தனர். இதனால் அவர்களுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த ரே‌ஷன் கடை ஊழியர்கள், “எங்களால் மேல் அதிகாரிகளிடம் கேள்வி கேட்க முடியாது, பொதுமக்கள்தான் கேட்க வேண்டும், அதிகாரிகள் உத்தரவுப்படிதான் நாங்கள் செயல்பட முடியும். பொருட்கள் வந்தால் விநியோகம் செய்வோம்” என்று தெரிவித்தனர்.

    இதுபோல் சர்க்கரை, அரிசி விநியோகமும் குறைக்கப்பட்டு உள்ளது. மாதத்தின் முதல் வாரத்தில் சென்றால் மட்டும்தான் அரிசி, சர்க்கரை கிடைக்கிறது. அதன் பிறகு எப்போது சென்றாலும் பொருட்கள் கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.


    மேலும் இலவச அரிசியும் குறைக்கப்பட்டு அதற்கு பதில் கோதுமை வழங்கப்படுகிறது. தற்போது 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. இந்த மாதம் முதல் 20 கிலோ அரிசியில் பாதியை குறைத்து விட்டு அதற்கு பதில் கோதுமை வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மத்திய அரசின் உணவு பாதுகாப்பு திட்டத்தால் அதிகளவு அரிசியை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ரே‌ஷனில் வழங்கப்படும் 20 கிலோ இலவச அரிசி திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் 10 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும், பிற மாவட்டங்களில் 15 கிலோ அரிசியும் 5 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது.

    6 பேர் கொண்ட குடும்பத்திற்கு 30 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக 25 கிலோ அரிசியும், 5 கிலோ கோதுமையும் வினியோகிக்கப்படுகிறது. இத்திட்டம் இந்த மாதம் முதல் செயல்படுத்தப்படுகிறது.

    தற்போது வெளிமார்க்கெட்டில் பருப்பு வகைகள் விலை கணிசமாக குறைந்து விட்டது. இதனால் பருப்புகள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய ரே‌ஷன் பொருட்கள் இடைத்தரகர்களாலும், சில ரே‌ஷன் கடை ஊழியர்களாலும் முழுமையாக மக்களை சென்றடையவில்லை. இதனால் அரசு மானியம் விரையமாவதை கட்டுப்படுத்தவே பருப்பு, பாமாயில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் சுமார் ரூ.300 கோடி செலவினம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகிறது.
    Next Story
    ×