search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபா தனி இயக்கம் தொடங்கியது ஏன்?: புதிய தகவல்கள்
    X

    தீபா தனி இயக்கம் தொடங்கியது ஏன்?: புதிய தகவல்கள்

    ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேராமல் தீபா தனி இயக்கம் தொடங்கியது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

    ‘எம்.ஜி.ஆர் -அம்மா- தீபா பேரவை’ என்று பெயரிடப்பட்டுள்ள இயக்கத்துக்கு கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். கருப்பு, சிவப்பு நிறகொடியின் நடுவில் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் கொடுக்கும் படம் இடம் பெற்றுள்ளது.

    தீபா தனது அரசியல் பயணத்தை எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி 17-ந்தேதியே தொடங்கி விட்டார். கட்சி பற்றிய அறிவிப்பை ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி அறிவிப்பதாக கூறி இருந்தார்.

    இதனால் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக தீபா வீட்டில் தினமும் தொண்டர்கள் திரண்டனர். அவர்களிடம் தீபா கருத்துக்களை கேட்டு வந்தார். தொண்டர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்வதற்காக அவரது வீட்டு முன்பு பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது. அதில் தொண்டர்கள் எழுதி போடும் கருத்துக்களை தீபா படித்து பார்த்து ஆலோசனைகளை தெரிந்து கொண்டார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார். அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை திரட்டி தனி அணியாக செயல்பட்டார். கட்சியையும் ஆட்சியையும் மீட்பேன் என்று உறுதி எடுத்தார்.

    இதனால் பெரும்பாலான ஆதரவாளர்கள் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் குவியத் தொடங்கினார்கள். அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகத் தொடங்கியது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில் ‘‘தீபா தங்கள் அணியில் சேரலாம் என்று அழைப்பு விடுத்தார். இதனால் தீபா ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேரலாம் என்று பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆதரவாளர்கள் தாங்கள் வைத்த பேனர்களில் அவர்கள் இருவரின் படத்தையும் அச்சிட்டனர். இந்த அணிக்கு அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில் கடந்த வாரம் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் சந்தித்து பேசினார்கள். அப்போது பேட்டியளித்த தீபா நானும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்படுவோம் என்றார். அதன்பிறகு தீபாவை ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்துக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி ஆரத்தி எடுத்து வரவேற்றார். இதனால் இருதரப்பு ஆதரவாளர்களும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

    இதற்கிடையே ஜெயலலிதா பிறந்த நாளில் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. தங்களை கலந்து ஆலோசிக்காமலேயே இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியான தண்டையார்பேட்டையில் நேற்று நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். ஆனால் தீபா பங்கேற்கவில்லை.

    அதற்கு மாறாக தீபா நேற்று தனது வீட்டில் புதிய இயக்கத்தை தொடங்கினார். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபா தனி இயக்கம் தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தீபா தனி இயக்கம் தொடங்கியது ஏன் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நிர்வாகிகளிடம் தீபாவும் அவரது கணவர் மாதவனும் கருத்து கேட்டு வந்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வம் அணியில் அவர் தான் முன்னிலைப்படுத்தப்படுவார். அவருடன் சேரும் போது தீபாவின் தனித்துவம் போய் விடும் என்று நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கிராமங்களில் தீபாவைத் தான் ஜெயலலிதாவின் வாரிசாக பொது மக்கள் நினைக்கிறார்கள். எனவே தீபா வெளிமாவட்டங்களுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செய்தால் அவருக்கு ஆதரவு பெருகிவிடும். அ.தி.மு.க. தொண்டர்களும் கட்சியும் முழுமையாக தீபாவின் கைக்கு வந்துவிடும் என்று தீபாவின் கணவர் மாதவனிடம் நிர்வாகிகள் எடுத்துரைத்துள்ளனர்.


    மேலும் தண்டையார் பேட்டை பொதுக்கூட்டத்தில் தீபா கலந்து கொள்வார் என்று தங்களை கேட்காமலேயே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அறிவித்து விட்டனர். இது போன்ற எந்த வி‌ஷயங்களையும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தங்களுடன் கலந்து பேசுவதில்லை என்ற மனக்குறையும் தீபா தரப்பினர் மத்தியில் இருந்து வருகிறது.

    மேலும் தீபாவை ஆதரிப்பவர்கள் யாருமே முன்னணி நிர்வாகிகள் இல்லை. ஒன்றிய, மாவட்ட, நகரம் அளவிலான நிர்வாகிகள் தான். தீபா தனியாக நின்றால் நமக்கு மாநில அளவில் பதவியில் முக்கியத்துவம் கிடைக்கும் என்று இந்த நிர்வாகிகள் கருதுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்துடன் தீபா இணைந்தால் நமக்கு முக்கிய பதவிகளுக்கு முன்னணி நிர்வாகிகள் வந்துவிடுவார்கள். எனவே நமக்கு மாநில அளவில் நல்ல பதவி கிடைக்காது என்று ஒன்றிய, மாவட்ட, நகர நிர்வாகிகள் நினைக்கிறார்கள். எனவே அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வேண்டாம். தனி அணியாக செயல்படுவோம் என்று கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டு தீபாவும், கணவர் மாதவனும் ஆலோசனை நடத்தினார்கள். அதன் பிறகே ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர வேண்டாம்.

    தனி இயக்கம் தொடங்கலாம் என்று தீபா முடிவு செய்து புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார். அத்துடன் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன். இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் என்றும் தீபா அறிவித்துள்ளார்.

    தற்போது அ.தி.மு.க.வில் சசிகலா பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். ஆனால் அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. அ.தி.மு.க. தொண்டர்கள் ஓட்டு போட்டு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதனால் அ.தி.மு.க. இரு பிளவாக உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் என்று தீபா அறிவித்து இருப்பது புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க. கட்சிக்குத்தான் இரட்டை இலை சின்னம் சொந்தம். அ.தி.மு.க.வில் இணையாமல் தனி அமைப்பை தொடங்கியுள்ள தீபா எப்படி இரட்டை இலை சின்னத்தை பெற முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    தீபாவுக்கு இருக்கும் இப்போதைய வாய்ப்பு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைவது ஒன்றுதான். இப்போதைக்கு ஓ.பன்னீர்செல்வம் முன்னிலைப்படுத்தப்பட்டாலும் வரும் காலங்களில் தீபா அரசியலை நன்கு தெரிந்து கொள்வதுடன் தலைமை பதவிக்கும் எளிதாக வரமுடியும். அதன் மூலம் அவர் அரசியலில் சாதிக்க முடியும். ஆனால் இப்போதைக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் 3 பிரிவாக நிற்கும் நிலையில் இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்து விடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
    Next Story
    ×