search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 4 மாதங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்: குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்
    X

    சென்னையில் 4 மாதங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்: குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்

    சென்னையில் 4 மாதங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவ மழை சரிவர பெய்யவில்லை. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

    வீராணம் ஏரியும் வறண்டு விட்டதால் சென்னைக்கு தினமும் வினியோகம் செய்யும் குடிநீரின் அளவை சென்னை குடிநீர் வாரியம் குறைத்துள்ளது.

    இதனால் பல இடங்ளில் குழாயில் நீரின் அழுத்தம் குறைந்ததால் பெரும்பாலான வீடுகளுக்கு குடி தண்ணீர் வரவில்லை. அது போன்ற இடங்களுக்கு லாரி மூலம் குடிநீர் வாரியம் தண்ணீர் சப்ளை செய்து வருகிறது.

    ஆனாலும் போதுமான குடிநீர் வினியோகிக்காததால் பொதுமக்கள் தனியார் லாரிகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது.

    தனியார் லாரிகளில் 1 குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    கிருஷ்ணா நதி நீர் இது வரை 2030 மில்லியன் கன அடி வந்துள்ளது. இன்னும் 1000 மில்லியன் கன அடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது இருக்கும் நீரைக் கொண்டு 3 மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் தேவையை சமாளிக்க முடியும். ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்களுக்கு சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும். அக்டோபர் மாதம் பருவ மழை தொடங்கிய பிறகு நிலைமை சரியாகி விடும்.

    இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை நகர மக்களுக்கு வினியோகம் செய்ய தினமும் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை. மீஞ்சூர், நெம்மேலியில் இயங்கும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் தலா 100 மில்லியன் லிட்டரும், வீராணம் திட்டம் மூலம் 180 மில்லியன் லிட்டரும், 4 ஏரிகளில் இருந்து 470 மில்லியன் லிட்டரும் வினியோகிக்கப்படுவது வழக்கம்.

    ஏரிகள் தற்போது வறண்டு வருவதால் தினமும் குடிநீர் வினியோகம் 35 சதவீதம் குறைக்கப்பட்டு 550 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது.

    மேலும் பரவனாறு, நெய்வேலி நீர்பரப்பு பகுதியில் இருந்து 60 மில்லியன் லிட்டர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள் மூலம் 70 மில்லியன் லிட்டர் தினமும் சென்னைக்கு குடிநீராக வினியோகிக்கப்படுகிறது.

    மற்ற நீர் ஆதாரங்கள் குறித்தும் ஆலோசித்து வருகிறோம். கல்குவாரிகளில் தேங்கியுள்ள, மழை நீர் குடிக்க உகந்ததா எனவும் ஆய்வு செய்து வருகிறோம்.

    சென்னை நகரில் இருக்கும் பழுதடைந்த கை பம்புகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக 75 கை பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×