search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பூரில் மதுக்கடை மூடப்பட்டதால் அங்கிருந்த பொருட்கள் லாரியில் ஏற்றப்படும் காட்சி.
    X
    பெரம்பூரில் மதுக்கடை மூடப்பட்டதால் அங்கிருந்த பொருட்கள் லாரியில் ஏற்றப்படும் காட்சி.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் 105 மதுகடைகள், 63 பார்கள் இன்று மூடப்பட்டன

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 105 மதுக்கடைகளும் 63 பார்களும் இன்று முதல் மூடப்பட்டன. படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படுவதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அவர் 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றவுடன் 500 மதுக்கடைகள் மூட உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்வராக பொறுப்பேற்றார். அவர் மேலும் 500 மதுக்கடைகள் மூடுதல் உள்ளிட்ட 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல் கையெழுத்திட்டார். அதன் அடிப்படையில் மூடப்படும் கடைகள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் கணக்கெடுத்தது.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 105 மதுக்கடைகளும் 63 பார்களும் இன்று முதல் மூடப்பட்டன. வடசென்னையில் 17 டாஸ்மாக் கடைகளும், 15 பார்களும், மத்திய சென்னையில் 19 மதுக்கடைகளும், 15 பார்களும், தென் சென்னையில் 31 மதுக்கடைகளும், 24 பார்களும் மூடப்பட்டன.


    பெரம்பூர், புளியந்தோப்பு பகுதியில் மட்டும் 5 மதுக்கடைகள் மூடப்பட்டன. பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மதுக்கடை (எண்.272), அகரம் எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் 2 கடைகள் (எண்.281, 291), புளியந்தோப்பு, கன்னிகாபுரம் அம்பேத்கர் கல்லூரி சாலையில் இருந்த மதுக்கடை (எண்.251), புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் இருந்த மற்றொரு கடை (எண்.241) ஆகியவை மூடப்பட்டு உள்ளது.

    கடைகளில் இருந்த மதுப்பாட்டில்கள், பிரிட்ஜ் மற்றும் பொருட்கள் லாரியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    இதே போல காஞ்சீபுரம் வடக்கு பகுதியில் 8 கடைகளும், 4 பார்களும், தெற்கு பகுதியில் 14 மதுக்கடைகளும் மட்டும் மூடப்பட்டன.

    திருவள்ளூர் கிழக்கில் 9 கடைகளும், 5 பார்களும், திருவள்ளூர் மேற்கில் 7 மதுக்கடைகள் மட்டும் மூடப்பட்டது. படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படுவதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். தமிழகத்தில் 1000 மதுக் கடைகள் மூடப்பட்டதால் தற்போது அவற்றின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 706 ஆக குறைந்துள்ளது.
    Next Story
    ×