search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரகசிய ஓட்டெடுப்பு கேட்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது: பண்ருட்டி ராமச்சந்திரன்
    X

    ரகசிய ஓட்டெடுப்பு கேட்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது: பண்ருட்டி ராமச்சந்திரன்

    சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ரகசிய வாக்கெடுப்பு என்பது கட்சி தாவல் தடுப்பு சட்டத்துக்கு எதிரானது.

    ரகசிய வாக்கெடுப்பு என்பது ஜனநாயகத்தை சீரழித்து விடும். ஊழலுக்கு வழிவகுத்து விடும். இது ஜனநாயகத்துக்கு ஏற்றதா? எனவேதான் தி.மு.க.வினர் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார்.

    சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கால அவகாசம் கொடுத்திருந்தார். ஆனால் 2 நாளில் மெஜாரிட்டியை நிரூபித்து விட்டோம்.

    எல்லா எம்.எல்.ஏ.க்களும் ஊருக்கு சென்று மக்களை சந்தித்து விட்டு வந்து நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஊருக்கு சென்ற எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்று என்ன நிச்சயம். 20 எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சியினர் கடத்திச் சென்றாலோ அல்லது தடுத்து நிறுத்தினாலோ ஜனநாயகம் என்ன ஆகும்.

    ஒருமுறை தீர்மானத்தை முன்மொழிந்து சபையை ஒத்திவைத்து விட்டால் இன்னொரு முறை தீர்மானத்தை கொண்டு வரக் கூடாது. 6 மாதம் கழித்துதான் கொண்டு வரவேண்டும் என்கிறார்கள். கவர்னர் அவகாசம் கொடுத்தது 15 நாள்தான். இதில் 6 மாதம் என்றால் நம்பிக்கை தீர்மானத்தை எப்படி நிறைவேற்றுவது.

    எதிர்க்கட்சிகளை வெளியேற்றி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். எனவே அதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படி செல்லாது என்று அறிவிக்க சட்டத்தில் இடமில்லை. கோரம் இல்லாவிட்டால் மட்டும்தான் செல்லாது என்று அறிவிக்க முடியும். ஆனால் சட்டசபையில் போதிய கோரம் இருந்தது.

    சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு என்பதற்கு சட்டத்தில் இடமில்லை. சபாநாயகரின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்திருக்கலாம். அப்படி வெளிநடப்பு செய்திருந்தால் விபரீதம் வந்திருக்காது.

    சில நோய்களுக்கு மருந்து கொடுத்தால் சரியாகும். சில நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்தால்தான் குணமாகும். அறுவை சிகிச்சை செய்து நோயை குணமாக்குவது போல 18-ந்தேதி சட்டசபையில் சபாநாயகர் செயல்பட வேண்டியதாயிற்று.

    இதில் நீதிமன்றமோ, கவர்னரோ, மத்திய அரசோ கேள்வி கேட்க முடியாது. சபாநாயகர் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்திருப்பது வேடிக்கையானது.



    நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடுநிலை வகிப்போம் என்று முதலில் தி.மு.க.வினர் கூறினார்கள். 17-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் எதிர்த்து வாக்களிப்போம் என்றனர்.

    இதற்கு என்ன காரணம். அரசுக்கு எதிர்ப்பை உருவாக்கவும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை எதிர்த்து ஓட்டு போட வைப்பதற்க்கும்தான். இதில் இருந்தே அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்பது ஒன்றே தி.மு.க.வின் குறிக்கோள் என்பது தெரிகிறது.

    இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று தி.மு.க. வினர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். கவர்னரை நாடுகின்றனர். குடியரசுத் தலைவரை பார்ப்போம் என்கின்றனர். இதற்காக இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள்.

    சபாநாயகர் என்ன தவறு செய்தார். எந்த உள்நோக்கமும் இல்லாமல் அவர் தனது கடமையை செய்தார். அதற்கு சபாநாயகரை பிடித்து தள்ளுவதற்கு என்ன பொருள்.

    1989-ல் அ.தி.மு.க. இரண்டானதால் கலைஞர் ஆட்சிக்கு வந்தார். அதே போல் நாமும் ஆட்சிக்கு வரலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது விஜிலா சத்யானந்த் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, பி.வி.ரமணா, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் அருகில் இருந்தனர்.
    Next Story
    ×