search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிகார துஷ்பிரயோகம் செய்து அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றி உள்ளது: நாராயணசாமி
    X

    அதிகார துஷ்பிரயோகம் செய்து அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றி உள்ளது: நாராயணசாமி

    தமிழக சட்டசபையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றி உள்ளது என தி.மு.க. சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் நாராயணசாமி பேசினார்.
    புதுச்சேரி:

    மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து புதுவை தெற்கு மாநில தி.மு.க. சார்பில் நடந்த உண்ணாவிரதம் நடந்தது.

    இதில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், டெல்லி பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

    அப்போது முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டு தமிழகமே பின்னோக்கி சென்றுள்ளது.

    அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித்தலைவராக முதலில் சசிகலாவை தேர்வு செய்தனர். தற்போது எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துள்ளனர்.

    சட்டமன்றத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைவருக்கும் தெரியும். கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்தனர். கவர்னர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து நடந்த சட்டமன்றத்தில் திமுகவும், காங்கிரசும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரை வற்புறுத்தினர்.

    ஆனால், சபாநாயகர் அதை மறுத்து எதிர்க்கட்சிகளை வெளியேற்றி வாக்கெடுப்பை நடத்தியுள்ளார்.


    23 ஆண்டுகாலம் நான் பாராளுமன்றத்தில் பணியாற்றியுள்ளேன். தற்போது புதுவை சட்டமன்றத்திலும் பணியாற்றுகிறேன்.

    பாராளுமன்ற, சட்டமன்றங்களில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த 3 முறைகளை கையாளலாம். குரல் வாக்கெடுப்பு, ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களை ஒரு புறமும், எதிர்க்கும் எம்.எல்.ஏ.க்களை ஒரு புறமும் நிறுத்தி எண்ணிக்கையை கணக்கெடுப்பது, ரகசிய வாக்கெடுப்பு என 3 முறைகள் உள்ளது. எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தபின்பு ரகசிய வாக்கெடுப்பையே சபாநாயகர் நடத்தியிருக்க வேண்டும்.

    தற்போது தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார், கவர்னரிடம் மனு அளித்துள்ளார்.

    அ.தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். எனவே, தமிழக மக்கள் மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர். இந்த உண்ணாவிரதத்திற்கு முழு ஆதரவை தெரிவிக்கிறோம். தமிழகத்தில் தர்மம் மீண்டும் வெல்லும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×