search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டாசு ஆலை–கடைகள் அடைப்பு
    X

    புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டாசு ஆலை–கடைகள் அடைப்பு

    விருதுநகர் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்கும் நோக்கத்தில் புதிய விதிமுறைகளை அதிகாரிகள் அறிவிக்க இருந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டாசு ஆலை கடைகள் மூடப்பட்டன.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர் ஆகிய தாலுகாவில் மட்டும் 750–க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் நேரடியாக சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு வரிகள் மூலம் வருமானம் கிடைத்து வருகிறது.
    விபத்து

    இந்த நிலையில் கடந்த ஆண்டு தீபாவளியை யொட்டி சிவகாசியில் 2 பட்டாசு கடைகளில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு பட்டாசு கடைகளுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டது. இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் இனி வரும் காலங்களில் பட்டாசு கடைகளில் வெடி விபத்து ஏற்படாமல் இருக்க சில புதிய விதிமுறைகளை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.

    இந்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட இருந்த நிலையில் இதற்கு பட்டாசு கடைகளின் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ள 6 விதிகளை அமல் படுத்தினால் இந்தியாவில் உள்ள பட்டாசு கடைகளில் சுமார் 70 சதவீதம் கடைகள் மூட வேண்டிய ஒரு நிலை ஏற்படும் என்றும், புதிய விதிமுறைகளில் மாற்றம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்கு பட்டாசு ஆலைகள் உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
    போராட்டம்

    அரசு அறிவிக்க உள்ள புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளின் உரிமையாளர்கள் நேற்று தங்களது கடைகளை அடைத்து விட்டு போராட்டத்தில் குதித்தனர். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1,624 பட்டாசு கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் தீபாவளி பண்டிகையையொட்டி சில வாரங்கள் மட்டும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறும். அதே நேரத்தில் சுமார் 400 கடைகள் தினமும் திறந்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் 400 கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

    இதே போல் விருதுநகர் மாவட்டத்தில் 773 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் நேற்று சுமார் 650–க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடி இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு கடைகள் மூடப்பட்டு இருந்ததால் அதில் வேலை செய்து வந்த ஊழியர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டனர்.
    Next Story
    ×