search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிபாளையத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் சாலைமறியல்
    X

    பள்ளிபாளையத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் சாலைமறியல்

    பள்ளிபாளையத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.
    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் களியனூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மன் நகர், சில்லாங்காடு பகுதிகளில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வரவில்லை என்றும், வரும் குடிநீரும் நுரையுடன் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

    இது தொடர்பாக ஊராட்சி அலுவலகத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சில்லாங்காடு பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். அங்கு திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அவர்கள், சுத்தமான குடிநீரை சீராக வினியோகம் செய்ய வேண்டும் என கூறி கோ‌ஷமிட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது தாசில்தார் ரகுநாதன், சுத்தமான, சுகாதாரமான குடிநீரை சீராக வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றார்கள். இந்த மறியல் காரணமாக அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×