search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் தேதியை உடனடியாக அறிவியுங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் வலியுறுத்தல்
    X

    உள்ளாட்சி தேர்தல் தேதியை உடனடியாக அறிவியுங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் வலியுறுத்தல்

    உள்ளாட்சி தேர்தலுக்கு உத்தேச தேதியை கூறாமல் சரியான தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது.
    சென்னை:

    தமிழக உள்ளாட்சி தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணை தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டவிதிகளின்படி பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்கிறேன். சட்டவிதிகளை பின்பற்றி புதிய தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டு, டிசம்பர் 31-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று கடந்த ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி தீர்ப்பளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் தனித்தனியாக மேல்முறையீடு செய்தது.

    இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீதான விசாரணை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, உள்ளாட்சி தேர்தலுக்கு உத்தேச தேதியை கூறாமல் சரியான தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

    அதற்கு மே 15-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரிகள் நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.

    மே 15-க்கு பிறகு ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தள்ளிப்போனால் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று நீதிபதிகள் கூறினர்.
    Next Story
    ×