search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்திருப்பது வாடகை நாற்காலி - நிரந்தரமானது அல்ல: பா.ஜ.க. கருத்து
    X

    எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்திருப்பது வாடகை நாற்காலி - நிரந்தரமானது அல்ல: பா.ஜ.க. கருத்து

    தமிழக சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்திருப்பது வாடகை நாற்காலி - நிரந்தரமானது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    நாகர்கோவில்:

    கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் மக்கள் அதை விரும்பவில்லை. தற்போதைய முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாடகை நாற்காலியில் அமர்ந்துள்ளார். இது நிரந்தரமானது அல்ல. சட்டசபை நுழைவு வாயிலில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தது தவறு.

    சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியாது. அதே போன்று சபாநாயகரும் தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளதையும் ஏற்க முடியாது. இதற்காகவா பொதுமக்கள் அவர்களை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்?.

    சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு நடந்திருந்தால் அது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும்.

    கடந்த ஆண்டே தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தெரியும். ஆனால், இதுகுறித்து சட்டசபையில் இதுவரை ஒரு விவாதமாவது நடத்தினார்களா? இப்போது, தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதை வேண்டாம் வேண்டாம் என்று கூறுகிறார்கள். தேர்வை எதிர்கொள்ளும் திறனை தமிழக மாணவர்களுக்கு இந்த அரசு அளிக்கவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தமிழக மாணவர்களை இதே நிலையில் வைத்துள்ளன. மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 2000 அரசு பள்ளிகளை மூடியுள்ளனர். இதனால் சுமார் 2 லட்சம் மாணவர்கள் இலவச கல்வியை இழந்துள்ளனர். அதே நேரத்தில் 500 தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அரசு பள்ளிகளை மூட தமிழக அரசுக்கு உரிமை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×