search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொந்த ஊருக்கு திரும்பும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பலத்த பாதுகாப்பு
    X

    சொந்த ஊருக்கு திரும்பும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பலத்த பாதுகாப்பு

    தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்களின் வீடுகள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க. சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என இரு பிரிவாக பிளவு பட்டது.

    சசிகலா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தனர்.

    சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.

    முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் கடந்த 10 நாட்களாக தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் கூறப்பட்டன.

    கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து காஞ்சீபுரம் தாசில்தார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் விடுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே கூவத்தூர் விடுதியில் இருந்து மதுரை எம்.எல்.ஏ. சரவணன், கோவை எம்.எல்.ஏ. அருண் குமார் ஆகியோர் தப்பி வந்தனர். இதில் சரவணன் ஓ.பி.எஸ். அணியில் சேர்ந்தார். அருண்குமார் எந்த அணிக்கும் ஆதரவளிக்காமல் ஓட்டெடுப்பை புறக்கணிப்பாக அறிவித்தார்.

    தப்பி வந்த எம்.எல்.ஏ.க்கள் புகாரை அடுத்து கூவத்தூர் விடுதியில் தங்கி உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் சுதந்திரமாக விட வேண்டும் அதன்பிறகே வாக்கெடுப்பு நடந்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக இருப்பதாக அ.தி.மு.க. தலைவர்கள் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை தொகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    சசிகலா அணியை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஏற்கனவே தொகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    எம்.எல்.ஏ.வை காணவில்லை என்று புகார்களும் கொடுத்தனர். பல இடங்களில் போராட்டங்களும் நடந்தன. எம்.எல்.ஏ.க்களுக்கும் குடும்பத்தினருக்கும் தொலைபேசியிலும் மிரட்டல்கள் வந்தன.

    நாளை எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு திரும்ப திட்டமிட்டு இருப்பதால் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தர விடப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு அவர்களது வீடு, அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தவிர ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ.க்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கும், சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 10 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சபாநாயகர் தனபாலின் வீடு சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை எதிரே பெரியார் குடியிருப்பு ஏ-பிளாக்கில் உள்ளது. அவரது வீட்டிற்கு சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவரது வீட்டை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் வரும் வாகனங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    சபாநாயகர் தனபால் அவினாசி தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். அவரது அலுவலகம் அவினாசி அருகே சேவூர் ரோடு செங்காடு திடலில் அமைந்துள்ளது.

    நேற்று இந்த அலுவலகம் மீது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர், இதில் அலுவலக கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சேதமானது.

    இதைதொடர்ந்து அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதம் நேராமல் இருக்க அவினாசி தொகுதி முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோல் தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்களின் வீடுகள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×