search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடைகளை தாண்டி சாதிப்பாரா?- தலையங்கம்
    X

    தடைகளை தாண்டி சாதிப்பாரா?- தலையங்கம்

    நாளை நடைபெற உள்ள நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றாலும் கட்சி பிளவு காரணமாக தொடரும் தடைகளை கடந்து எடப்பாடி பழனிச்சாமி சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
    சென்னை:

    ஒரு மனிதனின் வாழ்க்கையில் இப்படியெல்லாம் திருப்பு முனைவருமா? இதெல்லாம் நினைத்து பார்க்க முடியாதது. இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. இது கற்பனை கதை என்று புராண காலத்தில் நிகழ்ந்ததாக கருதப்படும் நிகழ்வுகளை விமர்சிப்போம்.

    ஆனால் நிகழ்காலத்திய பல நிகழ்வுகள் எதுவும் நடக்கலாம். எப்படியும் நடக்கலாம். அதை நம்மால் நிர்ணயிக்க முடியாது.

    ஜெயலலிதா 2 முறை ஜெயிலுக்கு சென்றபோதும், நிரந்தரமாக உலகைவிட்டு பிரிந்தபோதும் ஓ.பி.எஸ்.சை முதல்வர் பதவி தேடி வந்தது.

    எதிர்பாராத குழப்பங்கள் அரங்கேறி இப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி இருக்கிறார். இவர்கள் இருவருமே நாம் முதல்வராக வருவோம் என்று கற்பனையில் கூட நினைத்து இருக்க வாய்ப்பு இல்லை.

    மக்களால் கவரப்பட்ட மிகப்பெரிய தலைவர்கள், கட்சியையும் வளர்த்து ஆட்சியையும் பிடிப்பதற்கு அவர்களது உழைப்பும், போராட்டமும் அபரிமிதமாக இருக்கும்.

    ஆனால் இந்த இரண்டு சாதாரணமானவர்களும் ‘முதல்வர்’ என்ற அந்தஸ்தை பெற முடிந்திருக்கிறதென்றால்.... நினைப்பது ஒன்று. நடப்பது வேறொன்று என்ற உலகியல் நியதியை புறந்தள்ள முடியாது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    பரபரப்பான ஒரு அரசியல் நகர்வு தற்போது இலக்கை எட்டியிருப்பது சற்று நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பிரச்சனையை மேலும் வளரவிடாமல் முற்றுப்புள்ளி வைத்த கவர்னரை பாராட்ட வேண்டும்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு - பெரும்பான்மையை நிரூபிப்பது என்பதெல்லாம் சட்ட ரீதியான நடைமுறைகள். நடக்கட்டும். முடிவு வரட்டும்.

    ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது சமயோசிதம். பன்னீர்செல்வம் முதல்வராகி தனது செயல்பாட்டால் மக்களை கவர்ந்ததை மறுக்க முடியாது.

    இப்போது புதிய முதல்வர் வந்திருக்கிறார். அவரை பொறுத்தவரை எதிர்பாராத வாய்ப்பு. பல முனைகளில் இருந்தும், பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் வழக்கம் போல் வந்து குவிந்து விட்டன.

    இந்த வாழ்த்துக்களையும், வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வது முதல்வரின் கைகளில்தான் இருக்கிறது.

    அரசியல் குழப்பத்தால் நீயா, நானா? என்று எழுந்துள்ள போட்டி கட்சி சார்ந்தது. ஆனால் மக்கள் எதிர்பார்ப்பது ஆட்சி சார்ந்தது. நிலையான, நல்லாட்சி வேண்டும் என்பது தான் மக்கள் விருப்பம்.

    இதில் அவர்தான் முதல்வராகியிருக்க வேண்டும். இவர்தான் முதல்வராகியிருக்க வேண்டும் என்று அவரவர் ஆதரவாளர்களுக்கு விருப்பம் இருக்கும். அவர்களின் அந்த எண்ணத்தில் தவறு இல்லை.

    ஆனால் 5 ஆண்டுகள் ஆட்சி நடத்த ஒரு கட்சிக்கு மக்கள் வாய்ப்பு வழங்கி விட்டால் முதல்வர் வாய்ப்பை வழங்குவது அந்த கட்சி சார்ந்த வி‌ஷயம் என்பதுதான் நமது சட்டம்.

    இப்போது ஆளுங்கட்சிக்கு 134 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். முதல்வர் யார் என்பதை விட அவரது செயல்பாட்டை வைத்துதான் அவருக்கு மட்டுமில்லாமல் அவர் சார்ந்த கட்சியின் எதிர்காலமும் அமையும்.

    மக்கள் மனங்களை கொள்ளையடித்தால் அது அவர்களை வாழ வைக்கும். மக்களின் பணங்களை கொள்ளையடித்தால் அது வீழ்ச்சிக்குத்தான் வழி வகுக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    மக்களை பொறுத்தவரை ஒருவர் மீது ஆதரவு கருத்தும், எதிரான கருத்தும் இருக்கும். எதிரான கருத்து அதிகமாக இருந்தாலும் அதை செயல்படுத்த உரிய வழிமுறைகளை கையாள்வதுதான் சரியானதாக இருக்கும். அதற்கான அதிகாரத்தை ஜனநாயகம் மக்களுக்கு வழங்கி இருக்கிறது.

    காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் தலைமை தாங்கி வழிகாட்டிய அரசியல்பாதை! அவர்கள் அமர்ந்து அலங்கரித்த பதவி என்று பழங்கதையை இப்போதும் பெருமையாக பேசுகிறோம். இன்றும் அந்த காலத்தை நினைவுபடுத்துவது ஏன்?

    மற்றவர்களுக்கு பதவியை வழங்கும் உயர்ந்த இடத்தில் இருந்தும் எளிமையாய் வாழ்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள்.

    இன்று உயர்ந்த பதவி நேரடியாகவே தேடி வரும் வாய்ப்பை பெற்று இருப்பார்கள். அந்த தலைவர்களின் வாழ்க்கையை பின்பற்ற முயற்சிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

    கிரிக்கெட்டில் நோ பால் போட்டால் அதிர்ஷ்டமாக ‘பிரீஹிட்’ கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்தினால் சிக்சர் அடித்து அணிக்கு வலு சேர்க்கவும் முடியும். அதே நேரத்தில் ரன் எடுக்காமல் ‘வேஸ்ட்’ ஆக்கவும் செய்யலாம். அது அடிப்பவரின் திறமையை பொறுத்ததுதான்.

    அதே போல்தான் இப்போது எதிர்பாராத வாய்ப்பு எடப்பாடி பழனிச்சாமியை தேடி வந்திருக்கிறது. சரியாக பயன்படுத்தினால் சாதிக்க முடியும். நாளை நடைபெற உள்ள நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றாலும் கட்சி பிளவு காரணமாக தொடரும் தடைகளை கடந்து சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
    Next Story
    ×