search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் கொத்து கொத்தாக வந்து தாக்கும் ராட்சத கொசுக்கள்
    X

    சென்னையில் கொத்து கொத்தாக வந்து தாக்கும் ராட்சத கொசுக்கள்

    சென்னையில் தற்போது கொசுக்கள் அதிகரித்துள்ளது. கொத்து கொத்தாக வரும் கொசுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை தாக்கி வருகிறது.
    சென்னை:

    சென்னையில் தற்போது கொசுக்கள் அதிகரித்துள்ளது. கொத்து கொத்தாக வரும் கொசுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை தாக்கி வருகிறது.

    இதனால் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    கொசு உற்பத்தியை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    ஆனாலும் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரத்தில் மட்டுமின்றி பகல் நேரத்திலும் கொசுக்கள் கடிக்கின்றன. வீடுகளுக்கு படையெடுக்கும் கொசுக்கள் சாதாரண அளவில் இல்லை. அவை ராட்சத அளவில் மிகப்பெரியதாக காணப்படுகிறது.

    இந்த கொசுக்கள் கொசு மருந்து மற்றும் வீட்டில் வைக்க கூடிய கொசு வத்தி சுருள் மற்றும் ‘லிக்கூடு’ போன்றவற்றிற்கு கட்டுப்படுவது இல்லை. தெருக்களிலும், வீடுகளிலும் மொத்தமாக கொசுக்கள் படையெடுத்து வருகின்றன.

    மாநகராட்சி தடுப்பு நடவடிக்கைகளை மீறி கொசுக்கள் உற்பத்தி பெருகி வருவதற்கான காரணம் குறித்து சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த வருடம் தட்பவெட்ப சூழல் மாறியுள்ளது. பிப்ரவரி மாதத்திலும் குளிர் இருந்து வருகிறது. இந்த குளிர்ச்சியான சூழல் கொசுக்கள் உற்பத்திக்கு சாதகமாக உள்ளது. வழக்கமாக 7 நாட்கள் முட்டையில் இருந்து வெளிவரும் கொசுக்கள் குளிர்ச்சியான நிலை காரணமாக 5 நாட்களில் வெளி வருகிறது.

    மேலும் கொசுக்களின் வாழ்நாள் 22 நாள் மட்டுமே. ஆனால் தற்போதைய தட்பவெட்ப சூழ்நிலை காரணமாக அதன் ஆயுட்காலம் 29 நாட்களாக நீடிக்கிறது.

    கொசு உற்பத்தியை தடுக்க கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூவம் ஆறு, அடையாறு, பக்கிம்கால்வாய் ஆகிய இடங்களில் பைபர் படகு மூலம் கொசு உற்பத்தியை அழிக்க மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

    அதிகாலையிலும் மாலை நேரத்திலும் கொசு மருந்துகள் அடிக்கப்படுகின்றன.

    ராட்சத அளவிலான கொசுக்கள் செப்டிக் டேங்கில் இருந்து உற்பத்தியாகிறது. மண்டலம் 11 வளசரவாக்கம் பகுதியில்தான் 43 ஆயிரம் செப்டிக் டேங்குகள் உள்ளன. அங்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கொசு வலை செப்டிக் டேங்குகளில் கட்டப்படுகிறது.

    இது தவிர நீர்வழி பாதையிலும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. கொசு உற்பத்தி தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக கொசு உற்பத்தி குறைந்துவிடும்.

    கொசுக்களால் மலேரியா, டெங்கு போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லை. கொசுக்கடி குறித்து 1913 எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஆன்லைன் மூலம் பெறப்படும் இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×