search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் கவர்னருடன் மோதல் போக்கு: ஒட்டு மொத்த அமைச்சர்களும் டெல்லிக்கு படையெடுப்பு
    X

    புதுவையில் கவர்னருடன் மோதல் போக்கு: ஒட்டு மொத்த அமைச்சர்களும் டெல்லிக்கு படையெடுப்பு

    கவர்னர் மீது புகார் கொடுக்க ஒட்டு மொத்த அமைச்சர்களும் டெல்லி சென்றிருப்பதால் புதுவையில் பரபரப்பான நிலை காணப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த அதே நேரத்தில் புதுவையின் புதிய கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டார்.

    நாராயணசாமி தலைமையிலான புதிய அமைச்சரவையும், புதிய கவர்னரும் ஒரே காலகட்டத்தில் பதவி ஏற்றனர்.

    கிரண்பேடி கவர்னராக பதவி ஏற்றதுமே அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். தன்னிச்சையாக அதிகாரிகளை அழைத்து பேசுவது, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பது, அரசு கோப்புகளை டெல்லிக்கு எடுத்து சென்று மத்திய மந்திரிகளை சந்திப்பது போன்றவற்றில் ஈடுபட்டார்.

    இது, அமைச்சரவைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இருந்தாலும் ஆரம்பத்தில் எந்த மோதல் போக்கும் இல்லாமல் பார்த்து கொண்டனர். ஆனால், கவர்னர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    அமைச்சரவை அனுப்பும் திட்டம் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். உயர் அதிகாரிகளை மாற்றுவதற்கும் அனுமதிக்கவில்லை. வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பியது தொடர்பாக எழுந்த விவகாரத்தில் கூட்டுறவு அதிகாரி ஒருவர் மீது தன்னிச்சையாக புகார் கொடுத்து அவரை கைது செய்ய வைத்தார். மேலும் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    நிதி தொடர்பாக சென்ற கோப்புகள் பெரும்பாலும் திருப்பி அனுப்பப்பட்டன. தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் முகத்துவாரம் தூர் வாரும் பணியில் கவர்னர் தலையிட்டதால் இன்றுவரை முகத்துவாரம் தூர்வாரப்படாமல் மீனவர்கள் கொந்தளிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    முதியோர்கள், விதவைகளுக்கு மாதந்தோறும் பென்‌ஷன் வழங்குவதற்கான கோப்புக்கு நிதி இல்லை என காரணம் காட்டி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இந்த மாதம் இதுவரை பென்‌ஷன் வழங்கவில்லை.

    தியாகிகள் பென்‌ஷன் உயர்வு கோப்பையும் திருப்பி அனுப்பி விட்டார். மாதந்தோறும் இலவச அரிசி வழங்கும் திட்டத்திலும் கவர்னர் ஒத்துழைப்பு இல்லாததால் சில மாதங்களாக அரிசி வழங்கவில்லை.

    தொடர்ந்து கவர்னர் இப்படி செயல்படுவதால் உரிய திட்டங்களை செயல்படுத்த முடியாமல் அரசு தவிக்கிறது. எனவே, இது சம்பந்தமாக டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோரிடம் புகார் கூற அமைச்சர்கள் முடிவு செய்தனர்.

    இதற்காக ஒட்டு மொத்த அமைச்சர்களும் டெல்லி சென்றுள்ளனர். முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் நேற்றே டெல்லி சென்று விட்டனர்.

    இன்று அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கவர்னர் மீது புகார் கொடுக்கின்றனர். அதை தொடர்ந்து பிரதமர், உள்துறை மந்திரிகளை சந்திக்க உள்ளனர்.

    மேலும் புதுவைக்கு கூடுதல் நிதியும், புதிய திட்டங்களையும் கேட்டு மத்திய மந்திரிகள் பலரையும் அவர்கள் சந்திக்க உள்ளனர்.

    கவர்னர் மீது புகார் கொடுக்க ஒட்டு மொத்த அமைச்சர்களும் டெல்லி சென்றிருப்பதால் புதுவையில் பரபரப்பான நிலை காணப்படுகிறது.
    Next Story
    ×