search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 20-ந் தேதி முதல் புதிய விமான சேவை: விமான நிலைய இயக்குனர் தாஜி
    X

    தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 20-ந் தேதி முதல் புதிய விமான சேவை: விமான நிலைய இயக்குனர் தாஜி

    தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வருகிற 20-ந் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்க உள்ளதாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் தாஜி கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வருகிற 20-ந் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்க உள்ளதாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் தாஜி கூறினார்.

    இது குறித்து அவர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் காலை, மாலை நேரங்களில் ‘ஸ்பைஸ்ஜெட்’ தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னைக்கு மேலும் ஒரு விமான சேவை வருகிற 20-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. ‘ஏர் கார்னிவெல்’ என்னும் தனியார் நிறுவனம் மூலம் 72 இருக்கைகள் கொண்ட சிறிய வகை விமானம் இயக்கப்படுகிறது.

    இந்த விமானம் சென்னையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு மாலை 3.50 மணிக்கு வந்து சேரும். தூத்துக்குடியில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு 5.50 மணிக்கு சென்றடையும். இதனால் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் உள்ள ஓடுதளம் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. விமான பயணிகள் வசதிக்காக பயணிகள் வருகை அரங்கம், மற்றும் புறப்படும் அரங்கம் முற்றிலும் குளிரூட்டும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்காக 410 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கி உள்ளது. மேலும் 156 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இன்னும் 3 மாதங்களுக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும். விமான நிலைய விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

    தற்போது உள்ள ஓடுதள பாதை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. சரக்கு விமானங்களுக்கான தனி முனையமும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் 2 ஆண்டுகளுக்குள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்ட பிறகு அனைத்து வகையான பெரிய விமானங்களும் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்து செல்லும்.

    விமானம் தரையிறங்கும்போது விமானிக்கு 5 கிலோ மீட்டர் தூரம் வரை தெளிவாக தெரிய வேண்டும். அப்போதுதான் விமானத்தை தரையிறக்க முடியும். மேகமூட்டத்தால் போதுமான வெளிச்சம் இல்லாத நேரத்தில் விமானம் மதுரைக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மேகமூட்டமாக இருந்தாலும் விமானம் தரையிறங்குவதற்கு வசதியாக நவீன எந்திரம் பொருத்தப்பட உள்ளது. இந்த எந்திரத்தின் உதவியால் வெளிச்சம் குறைவாக இருந்தாலும் விமானத்தை விமானியால் தரையிறக்க முடியும். இந்த எந்திரம் நிறுவுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×