search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்தன காளைகள்
    X

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்தன காளைகள்

    அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
    அலங்காநல்லூர்:

    தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததின் காரணமாக கடந்த 2 ஆண்டுளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்தாண்டு நடைபெற்று வருகின்றது.

    ஜல்லிக்கட்டின் தொட்டிலாக விளங்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க 980 காளைகளும், 1464 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.

    வீரர்களுக்கு இன்று அதிகாலை முதல் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 7. 45 மணியளவில் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் வீரர்கள், மாடுகளை துன்புறுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 8 மணிக்கு அலங்காநல்லூர் கோட்டை முனியசாமி திடல் முன்பு உள்ள வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கோ‌ஷமிட்டு காளைகளை வரவேற்றனர். கோவில் காளைகளை வீரர்கள் பிடிக்கவில்லை. அதன் பின்னர் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்தன. வீரர்களுக்கும், காளைகளுக்கும் காயம் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு திடலில் 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் போடப்பட்டு இருந்தன.

    அசுரவேகத்தில் துள்ளிக்குதித்து வந்த காளைகளை, காளையர்கள் துரத்தி சென்று திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் களத்தில் வீரர்களாடு நின்று விளையாடின. தன்மேல் பாய்ந்த வீரர்களை காளைகள் பந்தாடின. குறிப்பிட்ட தூரத்திற்குள் காளைகளை பிடிக்க வேண்டும். கொம்பு, வாலை பிடிக்க கூடாது என விழா கமிட்டியினர் வீரர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.



    தில்லாக நின்று காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரூ. 1 கோடி மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.



    போட்டியின் போது காயம் அடையும் வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வாடிவாசல் அருகிலேயே மருத்துவ குழுவினர் மற்றும் 15 ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் இருந்தன.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க மாணவர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர கேலரி வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தடைபட்டிருந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றதையொட்டி அலங்காநல்லூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஜல்லிக்கட்டை காண மதுரை நகரில் இருந்து சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

    அலங்காநல்லூர், வாடிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் தென்மண்டல ஐ.ஜி. முருகன் மேற்பார்வையில், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அனந்தகுமார் சோமானி தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சக்திவேல் மற்றும் 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டையொட்டி அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன.
    Next Story
    ×