search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: சீறி பாய்ந்த 850 காளைகள்
    X

    பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: சீறி பாய்ந்த 850 காளைகள்

    பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற, சீறி பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் மடக்கிப்பிடித்தனர்.
    அலங்காநல்லூர்:

    2 ஆண்டு தடைக்கு பிறகு மதுரை மாவட்டத்தில் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. தடை காலத்திற்கு முன்பு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டை காண 1 லட்சம் பேர் வந்துள்ளனர்.

    தற்போது இந்த எண்ணிக்கை கூடும் என்ற எதிர்பார்ப்பால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. ஜல்லிக்கட்டில் துள்ளிவரும் காளைகள், அதனை மடக்கி பிடிக்கும் காளையர்கள் பதிவு போன்றவை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் அவர்களுக்கு இறுதிக்கட்ட மருத்துவ சோதனை நடத்தப்பட்டது.

    மாடுபிடிக்கும் போது வீரர்களுக்கும், துள்ளி வரும் காளைகளுக்கும் சேதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், ஜல்லிக்கட்டு திடலில் சுமார் 1 அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. பார்வையாளர் பகுதிக்கு காளைகள் சென்று விடாமல் தடுக்கும் வகையில் தடுப்பு கம்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

    மருத்துவ சோதனைக்கு பிறகு சுமார் 850 காளைகள் வாடிவாசல் கொண்டு செல்லப்பட்டன. காலை 9 மணிக்கு மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் போட்டியை தொடங்கி வைத்தார். முன்னதாக, அவர் விதிமுறைகளை பின்பற்றும் உறுதிமொழியை வாசிக்க, மாடுபிடி வீரர்கள் அதனை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து வாடிவாசல் வழியாக கிராமத்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பிறகு ஒவ்வொரு காளைகளாக வாடிவாசல் வழியே வெளிவந்தன. அவற்றை பச்சைநிற டீசர்ட், நீல நிற கால்சட்டை அணிந்த மாடுபிடி வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். 1067-க்கும் மேற்பட்ட வீரர்கள் களத்தில் இறங்கிய நிலையில், சில காளைகள் அவர்களை பந்தாடின.



    வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து வரும் காளைகளை, ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் வீரர்கள் பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும் அவர்கள் அந்த தூரத்தை அறிந்து கொள்வதற்காக அந்த இடத்தில் கொடியுடன் கூடிய கயிறும் கட்டப்பட்டு இருந்தது.

    குறிப்பிட்ட தூரத்திற்குள் காளைகளை பிடிக்க காளையர்கள் பாய்ந்த நிலையில், சில காளைகள் அவர்களுக்கு “தண்ணி” காட்டியது. தன் மேல் பாய்ந்த காளையர்களை கீழே தள்ளி, அவை சிலிர்த்து நின்றதை பார்த்து, பார்வையாளர்கள் கரகோ‌ஷம் எழுப்பினர்.

    போட்டியின் போது காயம் அடையும் வீரர்கள், மற்றும் காளைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் நிலையில் மருத்துவக்குழுவும் இருந்தது. அங்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.

    காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளுக்கும் சைக்கிள், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ மற்றும் பித்தளை - எவர்சில்வர் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் ஆனந்தத்துடன் எடுத்துச் சென்றனர்.

    ஜல்லிக்கட்டை காண லட்சக்கணக்கானோர் குவிந்த நிலையில், மதுரை சரக காவல் துறை துணைத்தலைவர் ஆனந்தகுமார் சோமானி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சக்திவேல் (மதுரை பொறுப்பு), ராஜராஜன் (விருதுநகர்), மணிவண்ணன் (ராமநாதபுரம்), தர்மராஜ் (கன்னியாகுமரி), மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். குடிநீர் மற்றும் பொது சுகாதார வசதிகளை பாலமேடு பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

    நாளை (10-ம் தேதி) காலை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக 980 காளைகளும், 1464 வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

    ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் 2 அடுக்கு தடுப்புவேலி, பார்வையாளர் காலரி, காவல்துறை உயர் கண்காணிப்பு கோபுரம், கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு களித்திடும் வகையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி அகன்ற திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அலங்காநல்லூரில் காளைகள் பரிசோதனை செய்யும் இடம், வீரர்கள் சோதனை செய்யுமிடம் மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்குமிடம் உள்ளிட்ட இடங்களில் உயர்மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப் பட்டுள்ளது. மேலும் பேருராட்சி நிர்வாகம் பொது சுகாதாரம், குடிநீர் வசதிகளை செயல் அலுவலர் ஜுலான் பானு மேற்பார்வையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சக்திவேல் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×