search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலில் கலந்த டீசல் படிமத்தை அகற்றும் இறுதிக்கட்ட பணி தீவிரம்
    X

    கடலில் கலந்த டீசல் படிமத்தை அகற்றும் இறுதிக்கட்ட பணி தீவிரம்

    கப்பல்கள் மோதிய விபத்தில் கடலில் கலந்த டீசல் படிமத்தை அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இந்த பணி நிறைவடைய வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    சென்னையை அடுத்துள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இரு கப்பல்கள் மோதியதால் அதில் இருந்த டீசல் கடலில் கலக்க தொடங்கியது. இது சென்னையின் கடலோர பகுதிகளில் பரவியது. இதை அகற்றும் பணியில் கடலோர காவல் படையினர், துறைமுக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அதைத் தொடர்ந்து மாநில அரசின் துறைகளை சேர்ந்தவர்களும், தன்னார்வலர்களும் இந்த பணிகளில் தீவிரமாக இறங்கினர். கடலில் கலந்த டீசல் படிமத்தை அகற்றும் பணி நேற்றும் நடந்தது.

    டீசல் படிமத்தை வெவ்வேறு வகையில் அகற்றும் வியூகத்தை அதிகாரிகள் செய்தாலும், தற்போது இறுதியாக வாளியில் மட்டுமே ஊழியர்கள் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். கடந்த வாரத்தில் சென்னையில் பல்வேறு கடலோர பகுதிகளில் கலந்திருந்த இந்த டீசல் படிமம் தற்போது அகற்றப்பட்டு உள்ளன.

    திருவொற்றியூர் பாரதியார்நகர் அருகே ஆரம்ப நாள் முதல் அதிகளவில் டீசல் படிமம் சேர்ந்திருந்தது. அதை அகற்றும் பணி நேற்றுடன் நிறைவடையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் நள்ளிரவில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதால் பாறைகளின் இடுக்குகளில் இருக்கும் டீசல் படிமம் மீண்டும் கடலுக்குள் கலந்து மிதக்கிறது. எனவே அதை அகற்றுவதில் சிக்கல் நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொடக்கத்தில் மீட்பு பணியில் ஏராளமானோர் ஈடுபட்டனர். நாளடைவில் பணியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைவதால் தொய்வு ஏற்பட்டு இருப்பதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கடலோர காவல்படை அதிகாரி மண்டல் கூறும்போது, ‘பணி செய்யும் ஆட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் டீசல் படிமத்தை அகற்றும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி 220 டன் டீசல் படிமம் அகற்றப்பட்டு இருக்கிறது’ என்றார்.

    அங்கு மேற்பார்வையிட்டு வரும் மாநில அரசின் துறை சார்ந்த அதிகாரிகள் கூறுகையில், ‘கடலில் கலந்த டீசல் படிமத்தை அகற்றும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. குறைந்த அளவிலேயே தற்போது டீசல் படிமம் இருப்பதால் இந்த பணி இன்று (புதன்கிழமை) நிறைவடைய வாய்ப்பு உள்ளது. கடல் மணற்பரப்பில் இருக்கும் சிறிய அளவிலான டீசல் படிமமும் அகற்றப்பட்டு வருகிறது’ என்றனர்.
    Next Story
    ×