search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அரசு ஊழியர்களுக்கு வங்கி கணக்கில் 2 முறை பொங்கல் போனஸ் வரவு
    X

    தேனி அரசு ஊழியர்களுக்கு வங்கி கணக்கில் 2 முறை பொங்கல் போனஸ் வரவு

    தேனி அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் போனஸ், பயணப்படி மற்றும் சரண்டர் ஆகிய செலவினங்கள் 2 முறை வரவுவைக்கப்பட்டதால் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

    தேனி:

    தேனி அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் போனஸ், பயணப்படி மற்றும் சரண்டர் ஆகிய செலவினங்கள் 2 முறை வரவுவைக்கப்பட்டதால் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

    அரசு ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ், பயணப்படி, சரண்டர் ஆகிய செலவுகள் மாவட்ட கருவூலம் மூலம் பில் பாஸ் செய்து அவை அனைத்தும் சி.டி.க்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கிற்கு பிரித்து அனுப்பப்படும்.

    தேனி மாவட்ட கருவூலத்தில் இருந்து கடந்த ஜனவரி 27-ந் தேதி அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் போனஸ், பயணப்படி மற்றும் இதர செலவீனங்கள் என பல லட்சம் ரூபாய் பில் பாஸ் செய்து பழனிசெட்டிபட்டி பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து சம்மந்தப்பட்ட வங்கி அலுவலர்களின் கணக்கில் பணம் வரவானது.

    அதன்பிறகு ஜனவரி 30-ந் தேதி மீண்டும் அதே ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட செலவீனங்களுக்கு பணம் வரவானது. இந்த தகவல் அரசு ஊழியர்களின் செல்போனுக்கு குறுந்தகவலாக வரவே அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஊழியர்களில் பலர் பொங்கல் போனசை எடுத்து செலவு செய்து விட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை பணம் வரவானதால் அதனையும் எடுத்து செலவு செய்தனர்.

    ஒரு சில அலுவலர்களுக்கு ரூ.55 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை பணம் வரவானது. மாவட்ட கருவூலம் ஜனவரி 27-ந் தேதி வழங்கிய சி.டி.யை ஜனவரி 30-ந் தேதி 2-வது முறையாக ஆன்-லைனில் ஏற்றி பணம் அனுப்பியதால் இந்த குளறுபடி நடந்துள்ளது தெரிய வந்தது.

    இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், அரசு ஊழியர்களுக்கு 2 முறை பில் பாஸ் ஆகி பணம் வரவு வைக்கப்பட்ட விபரம் தாமதமாகத்தான் தெரிய வந்துள்ளது. அந்த பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அரசுக்கு பணம் இழப்பு ஏற்படவில்லை. 2-வது அனுப்பிய பணத்தை ஊழியர்கள் செலவு செய்திருந்தால் அடுத்த மாத சம்பளத்தில் அது பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×