search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவின் கனவை நனவாக்க தொடர்ந்து பாடுபட வேண்டும்: கவர்னர் வித்யாசாகர் ராவ் பேச்சு
    X

    ஜெயலலிதாவின் கனவை நனவாக்க தொடர்ந்து பாடுபட வேண்டும்: கவர்னர் வித்யாசாகர் ராவ் பேச்சு

    தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்க தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று சட்டசபையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறினார்.
    சென்னை:

    தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்க தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று சட்டசபையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறினார்.

    தமிழக சட்டசபையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. சட்டசபையில் உரையாற்றுவதற்காக நேற்று காலை 9.55 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் தலைமைச்செயலகம் வந்தார். அவரை சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    காலை 10 மணிக்கு சட்ட சபைக்குள் கவர்னர் வித்யாசாகர் ராவ் வந்தார். சபாநாயகர் இருக்கை முன்பு அவர் வந்து நின்றதுடன், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் உறுப்பினர்களை பார்த்து கைகூப்பி வணங்கினார். அவர்களும் எழுந்து நின்று வணங்கினார்கள். அதனைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

    காலை 10.01 மணிக்கு சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆங்கிலத்தில் உரையாற்ற தொடங்கினார். அந்த நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேச முயன்றார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து நின்றனர். ஆனால், பேச வாய்ப்பு வழங்கப்படாததால், மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    சற்று நேரத்தில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர். இதற்கு மத்தியில், கவர்னர் வித்யாசாகர் ராவ் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டே இருந்தார். சரியாக காலை 10.52 மணிக்கு தனது உரையை அவர் நிறைவு செய்தார்.

    கவர்னர் வித்யாசாகர் ராவ் தனது உரையின் தொடக்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களின் மனம் கவர்ந்த தலைவராகவும், செயல்துடிப்பும், மதிநுட்பமும் மிக்கவராகவும் விளங்கிய முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எதிர்பாராத மறைவினால் ஏற்பட்டுள்ள துயரம் நிறைந்த இச்சூழ்நிலையில் இந்த மாமன்றம் கூடியுள்ளது. தமிழ்நாட்டின் மாபெரும் தலைவராக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் திகழ்ந்தார். மாநில மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அவரது துணிவும், அயராத உழைப்பும், நாம் பெற்ற எண்ணற்ற தலைவர்களுள் அவரை ஒரு விடிவெள்ளியாக ஒளிரச் செய்துள்ளன.

    நாட்டில் பல பெருமைகளை அவர் பெற்றதுடன், எல்லைகளைக் கடந்தும் பாராட்டுக்குரியவராக விளங்கினார். தமிழ்நாட்டில் சமூகப் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த, குறிப்பாக பெண்கள், குழந்தைகள், ஏழைகளின் நலனைப் பேணுவதில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பரிவோடு ஆற்றிய நற்பணிகள் லட்சக்கணக்கான மக்களால் வரும் காலங்களிலும் நினைவு கூர்ந்து பாராட்டப்படும். அவர் மறைந்து விட்டாலும், அவர் காட்டிய பாதையில் நாட்டிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்க நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வகுத்துத்தந்த பாதையில் இந்த மாநிலத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவரது அமைச்சரவைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எதிர்பாராத திடீர் மறைவினால் ஏற்பட்ட சோதனையான சூழ்நிலையிலும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் பண்பாட்டையும், பொது அமைதியைக் காப்பதில் அவர்களின் ஈடுபாட்டையும் வெளிக்கொணர்ந்து, மறைந்த தலைவரின் நினைவுகளைப் போற்றும் விதமாக, உண்மையான மரியாதையை கண்ணியத்தோடு வெளிப்படுத்தி நாட்டிற்கே வழிகாட்டியுள்ளனர்.

    இது போன்ற துயரமிக்க தருணத்தில், பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர்களும், காவல் துறையினரும் பொறுப்புணர்வோடும், கடமையுணர்வோடும், கண்ணியத்தோடும் ஆற்றிய நற்பணிகள் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கவர்னர் உரையாற்றி முடித்ததும், அதை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசித்தார். 10.52 மணிக்கு தமிழில் கவர்னர் உரையை வாசிக்க தொடங்கிய சபாநாயகர் ப.தனபால் காலை 11.46 மணிக்கு தனது பேச்சை நிறைவு செய்தார். 
    Next Story
    ×