search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் உரை - முக்கிய அம்சங்கள்
    X

    கவர்னர் உரை - முக்கிய அம்சங்கள்

    கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள் குறித்து கீழே விரிவாக பார்க்கலாம்.
    சென்னை:

    * மத்திய வரிப் பகிர்வில் ஏற்பட்ட இந்த பாதிப்பை சரி செய்ய, ஒரு சிறப்பினமாக 2,000 கோடி ரூபாய் அளவிலான நிதியுதவியை இந்த நிதிக்குழு காலத்தில் ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்.

    * அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் உதவி பெறும் திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்கினை 60 சத வீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

    * இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களின் நிலங்களை மீண்டும் வழங்கி, அவர்களின் பொருளாதார உரிமைகளை நிலைநாட்டி, சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் அவர்கள் வாழ சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

    * இலங்கையில் சிறைப்பட்டிருக்கும் எஞ்சிய மீனவர்களையும், பிடித்து வைத்துள்ள மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அளித்த கோரிக்கை மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 142 அடி அளவிற்கு உயர்த்தியது, இந்த அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி வரை நீர்மட்டத்தை மேலும் உயர்த்தி, தென் தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீரை தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.

    * காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பினை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்காக, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமைக்க வேண்டும்.

    * மாநிலத்தின் நீர் ஆதாரங்களை முறையாகவும் சிறப்பாகவும் பராமரித்து பயன்படுத்திட இந்த அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பொதுமக்களின் பங்களிப்புடன் நீர் ஆதார மேலாண்மையை மேற்கொள்ள ‘குடிமராமத்து’ திட்டத்தை இந்த அரசு விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் வரும் ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்தப்படும்.

    * மாவோயிஸ்ட் தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியுள்ளது. குற்றங்களை தடுப்பதற்கு திறமையான நடவடிக்கைகளை எடுக்க நவீன கருவிகள் மற்றும் தேவையான பிற வசதிகள் வழங்கப்பட்டு, காவல்துறை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    * மானாவாரி விவசாயப் பகுதிகளின் மேம்பாட்டிற்காகவும், அப்பகுதிகளில் பயிரிடப்படும் சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் உற்பத்தியையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்கும் நோக்குடனும், 2016-17-ம் ஆண்டில் தொடங்கி, அடுத்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தும் வகையில் 803 கோடி ரூபாய் செலவில், ‘நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண்மை இயக்கத்தை’ இந்த அரசு விரைவில் தொடங்க உள்ளது.

    * மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி தொடர்ச்சியாக 3-வது ஆண்டாக, அதாவது 2015-16-ம் ஆண்டிலும் 100 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவை விஞ்சியுள்ளது.

    * மாநில அரசு வலியுறுத்திய நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் தமிழ்நாடு 9.1.2017 அன்று ‘உதய்’ திட்டத்தில் இணைந்தது. காலாண்டுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை மாற்றியமைப்பதை நீக்கவும், மாநில அரசு கோரியபடி ஐந்தாண்டுக்கு கடனை காலம் தாழ்த்தி தீர்ப்பதற்கான இசைவுடன் 15 ஆண்டிற்கான கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

    * நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள சாயப் பட்டறைகளைச் சீரமைக்க, மத்திய அரசின் ‘ஒருங்கிணைந்த பதனிடும் தொழில்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ் நிதியுதவி பெறுவதற்கு இந்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    * ‘வீட்டிற்கோர் கழிவறை’ என்ற இலக்கை அடைய, இந்த அரசு பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து முனைப்போடு செயல்படுத்தி வருகிறது.

    * ஐந்தாவது மாநில நிதிக்குழு தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது. அந்த அறிக்கை மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த செயல் அறிக்கை சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் வைக்கப்படும்.

    * முதன்முறையாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மாநாடு நடத்த ஆயுத்தம்.

    * தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிற்பேட்டைகள் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக நிதியுதவி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    * இறந்தவரின் உடலுறுப்புகளை தானம் செய்யும் திட்டத்தில், நாட்டிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து, இரண்டாவது முறையாக மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று ஆணையத்தை மேலும் வலுப்படுத்தி, இறந்தோரின் உடலுறுப்புகளை மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் மாற்று சிகிச்சைகளுக்குப் பயன்படுத்துவதை வலுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
    Next Story
    ×