search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம்: சட்டசபையில் இன்று மாலை 5 மணிக்கு தாக்கல்
    X

    ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம்: சட்டசபையில் இன்று மாலை 5 மணிக்கு தாக்கல்

    ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்க அதன் சட்ட முன் வடிவு சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    சென்னை:

    ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் வெகுண்டு எழுந்து போராட்டம் நடத்தினர்.

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் அதற்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் தமிழகமே ஸ்தம்பித்தது. அதை தொடர்ந்து தமிழக அரசு நேற்று முன்தினம் அவசர சட்டம் பிறப்பித்தது.

    இந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்க அதன் சட்ட வடிவு சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட வேண்டும்.

    அதற்கான கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. அப்போது விலங்குகள் வதை தடுப்பு சட்ட திருத்த முன் வடிவு தாக்கல் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சபாநாயகர் தனபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று மாலை 5 மணிக்கு சட்டசபை கூடுகிறது. அதில் 2017-ம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்ட முன் வடிவு அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இந்த அவசர சட்டத்துக்கு இப்போதுள்ள நிலையில் அரசு நிறைவேற்ற வேண்டி உள்ளதால் சட்டமாக மாற்ற இந்த சட்டமன்றம் கூடுகிறது.

    நாளை (24-ந்தேதி) நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு கொண்டு வரப்படுகிறது. முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவு குறித்தும், பத்திரிகை ஆசிரியர் சோ, கர்நாடக இசை கலைஞர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஆகியோரது மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படுகிறது.

    இதை தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதன் மீது அனைத்து கட்சி தலைவர்களும் பேசுகிறார்கள் அதோடு சபை ஒத்திவைக்கப்படுகிறது.

    25 மற்றும் 26-ந்தேதி சட்டசபை விடுமுறை, 27-ந்தேதி கவர்னர் உரை மீதான விவாதம் தொடங்குகிறது. 28 மற்றும் 29-ந்தேதி இரு நாட்கள் விடுமுறை 30 மற்றும் 31 ஆகிய 2 தினங்களில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும். இதில் எதிர்க்கட்சி தலைவர் உள்பட அனைவரும் பேசுகிறார்கள். பிப்ரவரி 1-ந்தேதி கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் பதில் அளித்து பேசுகிறார்.

    மேலும் 2016-17ம் ஆண்டுக்கான முதல் துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மானியக் கோரிக்கை மீதான வாக்கெடுப்பு, நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு விவாதமின்றி நிறைவேற்றப்படுகிறது. மேலும் பல முக்கிய சட்ட முன் வடிவுகள் நிறைவேற்றப்படுகிறது. பிப்ரவரி 1-ந்தேதியுடன் சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×