search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவசர சட்டம் வெளியாகியும் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் ஓயாத போராட்டம்
    X

    அவசர சட்டம் வெளியாகியும் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் ஓயாத போராட்டம்

    ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் வெளியாகியும் தமிழகம் முழுவதும் போராடுபவர்களின் போராட்டக் குரல் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
    சென்னை:

    வாடிவாசல் திறந்தால் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி விடலாம். ஆனால் மெரீனா போர்க்களத்தில் நிற்கும் காளைகளை அடக்குவது அவ்வளவு எளிதானது அல்ல.

    இது உரிமைக்காக அடங்க மறுக்கும் காளையர்கள் கூட்டம் என்றாலும் எள் அளவும் அத்துமீறாத அற்புதமான காளையர்கள்.

    போராட்ட களம் புகுந்து இன்று (ஞாயிறு) நாட்கள் ஆறு ஆகி விட்டது. ஆனாலும் ஆறவில்லை அவர்களது சினம்.

    எப்படியாவது அடக்கியே தீர வேண்டும் என்று தவித்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் அவசர சட்டம் வந்தால் போர்க்களத்தில் அமைதி பூக்கள் பூத்து விடும் என்று எதிர்பார்த்தனர். நம்பினார்கள்.

    அவர்களது இந்த எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி விட்டது. முன் வைத்த காலை பின் வைக்கப்போவதில்லை என்று காளையர் கூட்டம் உறுதியாக உள்ளது.

    அவசர சட்டம் வரும், அதற்கு தடையும் வரும் என்று அனுபவ பாடத்தை எல்லாம் ஏற்கனவே படித்து விட்டோம். நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இங்கிருந்து எழ மாட்டோம் என்ற திட்டவட்டமான அறிவிப்புடன் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

    போராட்டக்களத்தில் இத்தனை லட்சம் பேர் குவிந்தார்கள் என்பதெல்லாம் வெறும் கணக்குதான். ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேரை போராட்டக்களம் சந்தித்து வருகிறது.

    ஆனால் இந்த மாணவர்களின் மனக்கணக்கு என்ன? என்பதுதான் மக்கள் எதிர்பார்க்கும் கணக்காக உள்ளது.

    அவசர சட்டம் வந்து விட்டது. ஜல்லிக்கட்டு தொடங்கப் போகிறது என்ற அறிவிப்பையெல்லாம் ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டு விட்டு பொது மக்கள் மெரீனா போர்க்களத்தை நோக்கி நடையை கட்டினார்கள்.

    இன்று மதியம் 12 மணிக்குள் திரண்டவர்கள் எண்ணிக்கை சில லட்சங்களை கடந்து அனைவரையும் மிரள வைத்துள்ளது. இதுவரை இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பகலில் மட்டுமே பார்வையாளர்களாக வந்து சென்றனர். ஆனால் நேற்றிரவு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் மெரீனாவில் தங்கி விட்டனர்.

    கொட்டிய பனியையும் பொருட்படுத்தாமல் இரவில் கடற்கரை மணலில் படுத்து தூங்கினார்கள். பொழுது புலர்ந்ததும், குழந்தைகளுக்கு தேவையான பால் அங்கேயே அடுப்பில் கொதிக்க வைத்து கொடுக்கப்பட்டது.

    குழந்தைகள் வைத்திருக்கும் பெண்களிடம் தொண்டர்கள் நேரில் சென்று பால் கொடுத்தனர். குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஒரு குழுவினர் மும்முரமாக ஈடுபட்டனர்.

    பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் அந்த குப்பைகளை ஏற்றி விட்டனர். ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்த பெண்கள் கையில் துடைப்பத்துடன் எந்த தயக்கமும் இல்லாமல், முகம் சுளிக்காமல் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

    அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை இளைஞர்களே போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினார்கள். லட்சக்கணக்கில் திரண்டிருந்த போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்த தமிழ்ப்பற்று பாடல்களை பாடினார்கள். அதற்கு ஏற்ப பரதநாட்டியம் ஆடி உற்சாகப்படுத்தினார்கள்.

    மாணவர்கள் இருப்பது மெரீனா. ஆனால் மொத்த தமிழகத்திலும் நடக்கும் போராட்டங்கள் அவர்கள் கண்ணுக்கு தெரிந்தது.

    அலங்காநல்லூரில் என்ன நடக்கிறது? நத்தத்தில் என்ன நடக்கிறது? கோவை ரேக்ளா ரேசில் என்ன நடக்கிறது? முதல்-அமைச்சர் என்ன செய்கிறார்? எங்கே செல்கிறார் என்பதை கூட உடனுக்குடன் ஒலி பெருக்கிகளில் அறிவித்தபடி இருந்தனர்.

    “என்ன அவசரம் ஜல்லிக்கட்டு நடத்த? ஜல்லிக்கட்டோடு அரசியல்வாதிகளை விளையாட விட மாட்டோம். இந்த அவசர சட்டம் நிரந்தர சட்டம் ஆகட்டும். அதற்கு பிறகு வாடிவாசல் திறக்கட்டும். அதற்குள் ஏன் இந்த அவசரம்” என்று ஆவேசத்துடன் பேசினார்கள்.

    அதை கேட்டதும் கூட்டத்தினரும் “விட மாட்டோம், விட மாட்டோம் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்” என்று உரத்த குரலில் கர்ஜித்தனர்.

    பார்வையாளராக வந்திருந்த உமா மகேஸ்வரி “மைக்”கை வாங்கி தைரியமாகப் போராடுங்கள். நாங்கள் உங்களுக்கு துணை இருக்கிறோம். ஒரு பீட்டா பல லட்சம் தமிழர்களை மிரட்டுகிறது. நாம் யார் என்று காட்டும் வரை போராடுங்கள் என்றார்.

    அவரது பேச்சை கேட்டு இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். வழக்கத்தை விட இன்று வெயில் சுட்டெரித்தது. என்றாலும் கூட்டத்தினர் அதை கண்டு கொள்ளவில்லை.

    குழந்தைகள் வைத்து இருந்தவர்கள் மட்டும் போர்வைகளை கூடாரம் போல அமைத்து அமர்ந்திருந்தனர்.

    ஆவி பறக்கும் டீயும் கிடைத்தது. இதமான இளநீரும் கிடைத்தது.

    லாரிகளில் கொண்டு வந்து குவிக்கப்பட்ட இளநீரை வெட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கொடுத்தனர். நாட்கள் 6 கடந்த பிறகும் அறிவிப்புகள் வந்த பிறகும் எந்த சலனமும் இல்லாமல் அதே வீரியத்தோடு போராட்டத்தை நடத்துகிறார்கள்.

    தலைவர் இல்லாத போராட்டம் என்கிறார்கள். எங்கள் தலைவன் தமிழ், அந்த தலைவன் சொல்லும் கட்டளையை ஏற்று ஜல்லிக்கட்டு உரிமைக்காக போராடுகிறோம் என்று உணர்ச்சி பொங்க கூறினார்கள்.

    வழக்கம் போல மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரான கோ‌ஷங்களும் இன்று களை கட்டியது. பலர் தங்கள் உணர்வுகளை, உரிமைகளை பதாகைகளில் எழுதி ஏந்தி வந்தனர்.

    வருகிற குடியரசு தினம் தமிழர்களின் கருப்பு நாள் என்று கோ‌ஷமிட்டனர். கருப்பு கொடிகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர். கருப்பு பட்டம் பறக்க விட்டனர். கருப்பு உடை அணிவித்தனர்.

    வழக்கத்துக்கு மாறாக அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அனைவரும் அருகில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகம் மற்றும் விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட நிழல் தரும் இடங்களில் ஆசுவாசமாக உட்கார்ந்திருந்தனர்.

    100 பேர் வரும் போராட்டத்துக்கு சென்றாலே மணிக்கணக்கில் வெட்ட வெளியில் காத்து நிற்போம். ஆனால் இப்போது பல லட்சம் பேர் நடத்தும் இந்த போராட்டத்தில் எங்களுக்கு எந்த வேலையும் இல்லை என்றனர் போலீசார்.

    திருவிழா கூட்டத்தை பார்த்து ரசிப்பது போல ரசித்துக் கொண்டிருக்கிறோம் என்று போலீசார் கூறினார்கள்.

    இளைஞர்களும் அடிக்கடி இளநீர், தண்ணீர், பிஸ்கட், டீ போன்றவற்றை போலீஸ் காரர்களுக்கு தாராளமாக அள்ளி கொடுத்தனர். சில போலீசார் தயங்கி யோசித்த போது, சும்மா சாப்பிடுங்க சார் என்று தோழமை உணர்வுடன் கொடுத்தனர். இதனால் போலீசாரும் உற்சாகம் அடைந்தனர்.

    போராட்டத்தின் வேகம் நாட்டின் தலைமை பீடத்தை அசைத்துள்ளது. ஆனால் நிரந்தர சட்டம் கிடைக்க வேண்டும் என்ற உணர்வோடு இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் மெரீனாவில் திரண்டுள்ளது.

    நாடு முழுவதும் பல மாநிலங்களில் பல போராட்டங்கள் நடந்துள்ளது. அத்தனையும் வன்முறையின் வடிவமாகத்தான் இருக்கும்.

    ஆனால் தமிழ்நாட்டுக்கு என்றுமே அமைதிப்பூங்கா என்ற பெயர் உண்டு. இப்போது இந்தியாவையே உலுக்கும் போராட்டம் நடந்த பிறகும் தமிழகம் அமைதி பூங்காதான் என்பதை இளைஞர்களும், மாணவர்களும் நிரூபித்துள்ளனர்.

    தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள அவசர சட்டமே ஜல்லிக்கட்டை பாதுகாக்க போதும் என்று சொல்லி வருகிறது. ஆனால் தமிழக இளைஞர்களும் மாணவர்களும், “இப்படி சொல்லி எங்களை ஏமாற்ற முடியாது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர பாதுகாப்பு தரும் சட்டத்தை இயற்றுங்கள்” என்கிறார்கள்.

    அது மட்டுமின்றி தமிழர்களின் பாரம்பரியத்தை முடக்க முயற்சி செய்யும் பீட்டா அமைப்பை தடை செய்து தமிழ்நாட்டில் இருந்தே விரட்ட வேண்டும் என்று உறுதியாக, தெளிவாக சொல்கிறார்கள்.

    இளைஞர்கள் சொல்வதும் சரிதானே என்று தமிழக மக்கள் 100 சதவீதம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவர்கள் போராட்டத்துக்கு ஆதரவை நீட்டித்துள்ளனர்.

    இனி இந்த வி‌ஷயத்தில் மத்திய - மாநில அரசுகள்தான் உரிய முறையில் செயல்பட வேண்டும்.

    தமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்றாமல் அவர்கள் கேட்கும் நியாயமான உரிமையை செய்ய வேண்டிய தார்மீகக் கடமையும் பொறுப்பும் அரசுகளுக்கு உள்ளது. எனவே அடுத்து மத்திய - மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு உலகத் தமிழர்கள் மனதில் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

    கடந்த ஒரு வாரமாக தமிழக இளைஞர்கள் பட்ட பாடுக்கு பலன் கிடைக்க வேண்டும். ஆட்சியாளர்கள் கையில்தான் அது உள்ளது.
    Next Story
    ×