search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்களின் மெரினா போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு
    X

    மாணவர்களின் மெரினா போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு

    மாணவர்களின் மெரினா கடற்கரை போராட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    சென்னை :

    தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மெரினா கடற்கரையில் ஒரே முழக்கத்துடன் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் குளிரையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராமல் கடுமையாக போராடி வருவதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர்களின் அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன்” என்று பாராட்டி உள்ளார்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில், “எந்த அசம்பாவிதமும் இல்லாத இப்படியொரு அறப்போராட்டம், இதுவரை இந்தியாவில் நடந்தது இல்லை. தமிழகத்தின் உரிமைகளை, தமிழ் இனத்தின் தனித்தன்மைகளை நசுக்குகின்ற எந்த முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ள போராட்டம்தான், இந்த மெரினா புரட்சி. உலகத்தின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் ஈர்த்த மாணவர் சமுதாயத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி, பாராட்டுகள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக கவர்னர் (பொறுப்பு) அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்-அமைச்சரும், தடை நீங்கியதாக அறிவித்துள்ளார். பாராளுமன்றம் கூடியதும், காளையை காட்சி பட்டியலில் இருந்து நீக்கி நிரந்தர சட்டம் உடனடியாக பிறப்பிக்கவேண்டும்’ என்று கூறி இருக்கிறார்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தனது அறிக்கையில், “அவசர சட்டம் கொண்டுவருவதற்கான ஆலோசனை மேற்கொண்டு செயல்படுத்துவதற்கு காரணமாக இருந்த முதல்-அமைச்சருக்கு என் சார்பிலும் சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பிலும் நன்றிகள்” என்று கூறியுள்ளார்.

    புதிய நீதிக்கட்சியின் நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்திற்கு விரைவாக அனுமதி வழங்கிய பிரதமர் நரேந்திரமோடிக்கும், சட்டத்தை கொண்டு வந்த முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றிகள். இதற்கு காரணமாக இருந்த இளைஞர் சமுதாயத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

    இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் தேவநாதன் யாதவ் தனது அறிக்கையில், ‘முதல்-அமைச்சரிடம் உரிய வழிமுறைகளை பரிந்துரைத்து, அவசர சட்டம் கொண்டு வரச் செய்த பிரதமர் மோடிக்கு தமிழினமே நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் வாழ்த்துகள். உலகிற்கு தமிழனின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் எடுத்துக்காட்டிய மாணவ சமுதாயத்திற்கும், இளைஞர் சமுதாயத்திற்கும் நன்றி’ என்று கூறி இருக்கிறார்.
    Next Story
    ×