search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரக்கோரி கரூர் மாவட்டத்தில் போராட்டம்
    X

    ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரக்கோரி கரூர் மாவட்டத்தில் போராட்டம்

    ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரக்கோரி கரூர் மாவட்டத்தில் போராட்டம் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் லாரிகள், மினி பஸ்கள் ஓடவில்லை.
    கரூர்:

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நேற்று 3-வது நாளாக கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கூடி போராட்டம் நடத்தினர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்பினர், இளைஞர்கள் அணி, அணியாக திரண்டு கரூர்- கோவை சாலையில் ஊர்வலமாக சென்று கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பலர் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகள், மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஏராளமான மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக திருவள்ளுவர் மைதானத்திற்கு வந்தனர். இதனால் நேற்று கரூர் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி கரூர் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அதன்படி ஜவகர் பஜார், கோவை சாலை, பழைய திண்டுக்கல் சாலை என கரூர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோன்று மினி பஸ்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் மினி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. லாரிகளும் ஓடவில்லை. ஆனால் வழக்கம் போல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கின. அரசு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியதால் வழக்கமாக நடக்கும் மாதிரி தேர்வுகள் நடந்தன.

    தனியார் பள்ளி மாணவர்களை பள்ளி பஸ்சில் சென்று அழைத்து வரும்போது ஏதாவது அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்பட்டன. மேலும் இளைஞர்கள் சிலர் நேற்று பீட்டா என்ற வாசகம் எழுதி அதை பாடைபோல் கட்டி தூக்கி வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதே போன்று நேற்று தெற்கு காந்திகிராமம் பகுதி மக்கள் ஏராளமானவர்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்குள்ள மைதானத்தில் கூடி போராட்டம் நடத்தினர்.

    நெய்தலூர் காலனி பஸ் நிறுத்தத்தில், கல்லூரி, பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

    தோகைமலை பகுதியில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல், கடையடைப்பு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் ஆகியவை நடைபெற்றது. இதில் தோகைமலை- திருச்சி சாலையில் உள்ள ஆர்.டி.மலையில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தோகைமலை- திருச்சி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் தோகைமலையில் வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் அனைத்து கடைகளையும் அடைத்து தோகைமலை இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஜல்லிக்கட்டு காளையை அழைத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். மேலும் காவல்காரன்பட்டி, கீழவெளியூர், மேலவெளியூர், கழுகூர், கல்லடை பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளோடு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை, புகழூர் டி.என்.பி.எல். காகித ஆலை முன்பு தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலாயுதம்பாளையம், புகழூர், புன்செய் தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், காகிதபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    Next Story
    ×