search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாக ரெயில் மறியல் போராட்டம்
    X

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாக ரெயில் மறியல் போராட்டம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாக ரெயில் மறியல் போராட்டம் சாரை சாரையாக குவியும் பொதுமக்கள்
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் வலு வடைந்துள்ளது. மாணவர், இளைஞர் படைக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்களும் போராட்ட களத்தில் இறங்கி ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டுகிறார்கள்.


    திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன் மாணவர்கள், இளைஞர்கள் 4-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் முழுமையான தீர்வல்ல, நிரந்தர சட்டம் வேண்டும்.

    பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். தமிழர்கள் மனதை கொச்சைப்படுத்தி தமிழ் பெண்களை இழிவாக பேசி கருத்து வெளியிட்ட பீட்டா அமைப்பின் நிர்வாகி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த நிர்வாகியை நாடு கடத்த வேண்டும்.

    அதுவரை எங்களது போராட்டம் ஓயாது. தொடரும் என்று இளைஞர் படை கோ‌ஷம் எழுப்பினர். கலசப்பாக்கத்தில் தாலுகா அலுவலகம் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    செங்கம் அருகே அன்வராபாத் கிராமத்தை சேர்ந்த மாணவர், இளைஞர் படை ஊர்வலம் சென்றனர். செங்கம் எம்.ஜி.ஆர். சிலை அருகே போராட்ட களத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

    சேத்துப்பட்டு 4 வழிச் சாலையில் காமராஜர் சிலை அருகே 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. செய்யாறில் ஆரணி கூட்ரோட்டிலும் போராட்டம் தொடர்கிறது.

    ஆரணி நகரில் உள்ள கோட்டை மைதானத்தில் 4-வது நாளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு மின்னியல் துறை மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆதரவு அளித்தனர்.

    போளூர் பஸ் நிலையம் மற்றும் போளூர் அடுத்த வடமாதி மங்கலம் கிராமத்தில் போராட்டம் தொடர்கிறது.

    கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் ரெயில் நிலையம் அருகே தேவாங்கபுரம் கிராம மக்கள் இன்று காலை ரெயில் மறியல் செய்தனர்.

    விழுப்புரத்தில் இருந்து திருப்பதி சென்ற ரெயிலை மறித்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மக்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    தகவலறிந்து வந்த ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், கண்ணமங்கலம் தாசில்தார் தமிழ்மணி மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து ரெயிலை விடுவித்த கிராம மக்கள், திருப்பதியில் இருந்து விழுப்புரம் சென்ற மற்றொரு ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்.

    கீழ்பென்னாத்தூரில் உள்ள துணை தபால் நிலையம் அருகே மாணவர்கள், இளைஞர் படையினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வெம்பாக்கம், தூசி, மாங்கால் கூட்ரோடு, மாமண்டூர், அப்துல் லாபுரம், கூழமந்தல் கிராமம் ஆகிய பகுதிகளிலும் தொடரும் போராட்டம் வலுவடைந்து உள்ளது.

    இதேபோல் தண்டராம்பட்டு, வாணாபுரம் உள்பட திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வலுப்பெற்று தொடர்ந்து நடக்கிறது.

    மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொது மக்கள் சாரை சாரையாக போராட்ட களத்திற்கு திரண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு, பீட்டாவுக்கு எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×