search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசிபுரம் அருகே நள்ளிரவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை இளைஞர்கள் சிறை பிடித்தனர்
    X

    ராசிபுரம் அருகே நள்ளிரவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை இளைஞர்கள் சிறை பிடித்தனர்

    ராசிபுரம் அருகே நள்ளிரவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை இளைஞர்கள் சிறை பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ராசிபுரம்:

    ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும், தமிழகத்தில் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று ராசிபுரம் தாலுகா முழுவதும் பல இடங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் நடந்து வருகின்றது. அதேபோல் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர் கேட்டில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணியளவில் ராசிபுரத்தில் இருந்து ஈரோடு நோக்கி மாடுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது. அதை கண்ட இளைஞர்கள் அந்த லாரியை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் லாரி ஓட்டுனர் லாரியை நிறுத்தவில்லை. இதனையடுத்து நிற்காமல் சென்ற லாரியை 2 சக்கர வாகனங்களில் சென்ற இளைஞர்கள் துரத்தி சென்று குருசாமிபாளையம் அருகே மடக்கி பிடித்தனர். அங்கிருந்து அந்த லாரியை மீண்டும் ஆண்டகளூர் கேட்டில் உள்ள புறநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் லாரியை சிறைப்பிடித்து மாடுகள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி ஆர்ப்பாட்டம் நடந்து வரும் இந்த தருணத்தில் மாடுகள் துன்புறுத்தப்பட்டு லாரியில் கொண்டு செல்லப்படுவது தங்களுக்கு மன வேதனையை அளிப்பதாகவும், இது போன்று நாட்டு மாடுகளை துன்புறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

    சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பிறகு நாட்டு மாடுகளை ஏற்றி வந்த லாரியை போலீசார் ராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் சின்ன சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு 25-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை லாரியில் கொண்டு சென்றது தெரியவந்தது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×