search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு வந்தது
    X

    கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு வந்தது

    கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 112 கன அடிவீதம் வந்துகொண்டிருக்கிறது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி.

    இந்த ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியதை அடுத்து ஆந்திர அரசு கடந்த 9-ந்தேதி 1000 கனஅடிவீதம் தண்ணீர் திறந்து விட்டது.

    கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 12-ந்தேதி ஆந்திர மாநில தலைநகரம் அமராவதிக்கு சென்று அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபுநாயுடுவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்று 14-ந்தேதி கூடுதலாக 700 கனஅடி தண்ணீர் திறந்து கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆக தற்போது மொத்தம் வினாடிக்கு 1700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    இந்நிலையில் கிருஷ்ணா கால்வாய் ஓரங்களில் மதகுகளை ஆந்திர விவசாயிகள் திறந்து தண்ணீரை தம் விளை நிலங்களுக்கு பாய்ச்சி விட்டதால் தமிழக எல்லைக்கு தண்ணீர் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா மாநிலம் சென்று திறக்கப்பட்ட மதகுகளை மூட நடவடிக்கை எடுத்ததால் நேற்று முன்தினம் காலை கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாயின்ட் வந்தடைந்தது.

    நேற்று அதிகாலை வரை வினாடிக்கு வெறும் 5 கனஅடி வீதம் தண்ணீர்தான் வந்தது. ஆனால் மதியம் முதல் தண்ணீர் வரத்து அதிகமாகியது.

    இன்று காலை வினாடிக்கு 112 கன அடிவீதம் வந்து கொண்டிருந்தது. இந்த தண்ணீர் இன்று பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

    பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 33 கனஅடிவீதம் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி 22.75 அடி தண்ணீர் மட்டம் பதிவாகியது.

    546 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து மெட்ரோ வாட்டர் போர்டுக்கு 32 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கண்டலேறு அணையிலிருந்து தற்போது தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×