search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் கொட்டும் மழையிலும் தொடர் போராட்டம்
    X

    ராமநாதபுரத்தில் கொட்டும் மழையிலும் தொடர் போராட்டம்

    ராமநாதபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களின் காலவரையற்ற போராட்டம் கொட்டும் மழையிலும் இன்று 4-வது நாளாக நடைபெற்றது.

    ராமநாதபுரம்:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும், ராமநாதபுரம் பட்டணம் காத்தான் ஊராட்சி அலுவலகம் முன்பு கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அரசியல் சார் பற்ற பல்வேறு சங்கங்கள் அணி திரண்டு மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ராமநாதபுரத்தில் டாக்டர்கள் சங்கம் சார்பில், அரசு மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஏராளமான டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு தெரிவித்தும், பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தியும் கோ‌ஷம் எழுப்பினர்.

    இதே போல், உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், பள்ளி வாகன ஓட்டுநர் நலச்சங்கம், இருசக்கர, நான்கு சக்கர வாகன பழுதுபார்ப்போர் நலச்சங்கம், லேப் டெக்னீசியன்கள் சங்கம், போட்டோ, வீடியோ கிராபர்கள் சங்கம், அச்சக தொழிலாளர் சங்கம் உள்பட பல்வேறு சங்கத்தினர் ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவை தெரிவித்தனர். மாவட்ட வர்த்தகர் சங்கத்தினர், ராமநாதபுரம் செய்தியாளர் சங்கம் சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

    நேற்று இரவு திடீரென மழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவில் அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மழை, பனி, வெயிலில் பாதுகாக்க நேற்று சாமியானா பந்தல் அமைக்கப்பட்டது. மாணவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் சார்பற்ற சங்கத்தினர், பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்ட இடத்திற்கு வந்து ஆதரித்து பேசினர்.

    போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் நடத்தி உற்சாகப்படுத்தினர். உணவு, தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்டுகள் சமூக ஆர்வலர்களும், தனியார் வர்த்தக நிறுவனத்தினரும் ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர்.

    கீழக்கரை: கீழக்கரையில் தி.மு.க. நகர் செயலாளர் பசீர் அகமது தலைமையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் இன்று காலை கடற்கரையில் இருந்து கீழக்கரை முக்கு ரோடு வரை ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×