search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நீடிப்பு: ரெயில் போக்குவரத்து 3-வது நாளாக பாதிப்பு
    X

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நீடிப்பு: ரெயில் போக்குவரத்து 3-வது நாளாக பாதிப்பு

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் நீடித்து வருவதால் ரெயில் போக்குவரத்து 3-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மக்கள் எழுச்சியுடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை, சேலம், ஆகிய இடங்களில் ரெயிலை மறித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை செல்லூரை அடுத்த தத்தனேரி பாலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட ரெயில் தொடர்ந்து அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. ரெயில் முன்பு மாணவர்கள், இளைஞர்கள் இரவு பகலாக படுத்து கிடப்பதால் ரெயில் போக்குவரத்து தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில் சேவையும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டன. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த மறியல் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதால் தென் மாவட்ட ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

    காரைக்குடி, மானாமதுரை, திருச்சி வழியாக ரெயில்கள் திருப்பி விடப் பட்டு எழும்பூருக்கு தாமதமாக ரெயில்கள் வந்து சேர்ந்தன. பலமணி நேரம் தாமதமாக தென் மாவட்ட ரெயில்கள் வந்ததால் மாலையில் ரெயில்களை இயக்குவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் நேற்று மாலையில் எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    இதேபோல் கன்னியாகுமரி, முத்துநகர், அனந்த புரி, நெல்லை உள்ளிட்ட 7 ரெயில்கள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படவில்லை. இரு மார்க்கத்திலும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு தொகையும் திருப்பி கொடுக்கப்பட்டன.

    இன்று 3-வது நாளாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம்-பெங்களூர் பாசஞ்சர் ரெயில், நாகர்கோவில்-கோயம்புத்தூர் பாசஞ்சர் ரெயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கன்னியாகுமரி- ஹவுரா எக்ஸ்பிரஸ் (1266) இன்று திருவனந்தபுரம், ஈரோடு, பெரம்பூர் கொருக்குப்பேட்டை, விஜயவாடா வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

    இதேபோல் திருச்சி-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், காரைக்கால்-பெங்களூர் பாசஞ்சர், திருச்சி-ராமேஸ்வரம் பாசஞ்சர் ஆகிய ரெயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சேலத்தில் இன்று 3-வது நாளாக ரெயில் சிறைபிடிப்பு போராட்டம் நடந்தது. தண்டவாளத்தில் அமர்ந்தும் ரெயில் என்ஜின் மீது ஏறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களுக்கு எழும்பூரில் இருந்து ரெயில்களை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.

    திருச்செந்தூர், கன்னியாகுமரி, நெல்லை, ராமேஸ்வரம், திருவனந்தபுரம், தென்காசி ஆகிய பகுதிகளுக்கு மதுரை வழியாக செல்லாமல் விழுப்புரம், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயக்கப்பட உள்ளது. அதே போல தென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு மாற்று பாதையில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    எழும்பூரில் இருந்து இன்று காலை புதுச்சேரி, குருவாயூர், சோழன் ஆகிய ரெயில்கள் புறப்பட்டு சென்றன. தென் மாவட்டங்களுக்கு ரெயில் போக்குவரத்து இன்று சீராகும் என்று பயணிகள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
    Next Story
    ×