search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு களம் - தமிழகம் முழுவதும் போராட்டகளத்தில் 25 லட்சம் பேர் திரண்டனர்
    X

    ஜல்லிக்கட்டு களம் - தமிழகம் முழுவதும் போராட்டகளத்தில் 25 லட்சம் பேர் திரண்டனர்

    தமிழகம் முழுவதும் போராட்ட களத்தில் 25 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் போராட்ட களத்தில் 25 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டுள்ளனர்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரம் இளைஞர்களுடன் தொடங்கிய போராட்டம் இன்று உலகமே வியந்து பார்க்கும் வகையில் விசுவரூபம் எடுத்துள்ளது. இதன் மூலம் புரட்சி போராட்ட களமாக மெரினா கடற்கரை உருவெடுத்துள்ளது.

    சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் தலைநகருக்கு படையெடுத்து வந்து இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.

    பொதுமக்கள், வியாபாரிகள், பல்வேறு அமைப்பினர், தொழிற்சங்கத்தினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என சாதி, மதம், இன வேறுபாடின்றி நேற்று மெரினா கடற்கரையை நோக்கி வந்தனர். உணர்ச்சிகரமாக போராடும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தங்களுடைய எழுச்சிமிகு ஆதரவை அளித்தனர்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் அனைவரும் ஒருமித்த குரலில் விண் அதிர கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாகவும் சென்றனர்.

    நேற்று மதியத்துக்கு மேல் மெரினா ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. நேப்பியர் பாலம் முதல் கலங்கரைவிளக்கம் வரை கடற்கரை சாலை முழுவதும் மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. மெரினாவை நோக்கி வரும் அனைத்து நுழைவுவாயில்களும் முடங்கின. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று, ஆமை போல ஊர்ந்து சென்றன.

    பெரும்பாலான மாநகர பஸ்கள் இயங்காததால் மின்சார ரெயில்கள் மூலம் பலர் மெரினாவுக்கு படையெடுத்து வந்தனர். இதனால் மின்சார ரெயில்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    மெரினாவில் நேற்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 5 லட்சம் பேர் திரண்டிருக்கலாம் என்று உளவுப்பிரிவு போலீசார் கூறினர். ஆனால், மெரினாவில் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் கூறும்போது, பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு நாங்கள் இப்படி ஒரு கூட்டத்தை மெரினா கடற்கரையில் பார்த்தது இல்லை. சுமார் 10 லட்சம் பேராவது திரண்டிருப்பார்கள் என்று மெய்சிலிர்த்து கூறினர்.

    மெரினாவில் நேற்று திரண்ட கூட்டம் தமிழர்களின் போர்குணத்தையும், ஒற்றுமையையும் உலகிற்கே பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 300 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. 25 லட்சம் பேர் பங்கேற்று மாபெரும் ஆதரவு அளித்துள்ளனர். 
    Next Story
    ×