search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வங்கி மேலாளர் வீடு
    X
    கொள்ளை நடந்த வங்கி மேலாளர் வீடு

    அஞ்சுகிராமம் அருகே வங்கி மேலாளர் வீட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை

    அஞ்சுகிராமம் அருகே வங்கி மேலாளர் வீட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அஞ்சுகிராமம்:

    அஞ்சுகிராமம் அருகே தெற்கு பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது57). இவர் மதுரையில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு ஷிவானி என்ற மகள் உள்ளார். இவர் சிவகாசியில் உள்ள கல்லூரி ஒன்றில் தங்கி படித்து வருகிறார். தற்போது ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி போராட்டம் நடந்து வருவதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இதையடுத்து மகள் ஷிவானியை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக மகேஷ்வரி சிவகாசிக்கு புறப்பட்டுச் சென்றார்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு மகளை அழைத்துக் கொண்டு மகேஷ்வரி வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்ற போது வீட்டின் உள்ளே இருந்து வாலிபர் ஒருவர் பின்பக்க கதவு வழியாக ஓடினார்.

    இவர்கள் திருடன், திருடன் என கூச்சலிட்டதுடன் அந்த வாலிபரையும் துரத்தினார்கள். வீட்டை விட்டு வெளியேச் சென்ற கொள்ளையன் அந்த பகுதியில் தயார் நிலையில் நின்ற கார் ஒன்றில் ஏறி தப்பி ஓடி விட்டான்.

    இதைத் தொடர்ந்து மகேஷ்வரியும், ஷிவானியும் வீட்டின் மற்ற அறைகளுக்குச் சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை திருடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. வேணுகோபால், இன்ஸ்பெக்டர் சாம்சன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கம்பி மற்றும் ஆயுதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டின் கதவு மற்றும் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மகேஷ்வரி, ஷிவானியிடம் கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை போலீசார் கேட்டறிந்தனர். பின்னர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வாகன சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை.

    மகேஷ்வரி சிவகாசிக்குச் சென்று மகளை அழைத்து வர செல்வதை பார்த்துதான் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
    Next Story
    ×